அழுக்காறு

அழுக்காறு

ஆக்கம்: காந்தி முருகன்

மலேசியா

ஓங்கிய வேகத்தைப் பார்க்க என்னால் இயலவில்லை.என் கண்களும் துணியவில்லை.இருந்தும் மனம் அதன் தாக்கத்தைப் பார்க்க நினைத்தது.வானை முட்டும் மின்னல் வேகத்தில் சென்றது திரும்பி கீழே பூமிக்கு விரைந்திடும் போது அதன் வேகம் பன்மடங்கு அதிகரித்திருக்கும்.தொப்பென்று விழும் பாறைகள் போன்று அதன் தாக்கங்களின் சாரம்.அது எனக்காகக் தான் உயரே போனது.என்னிடத்தில்தான் வந்து சேர்ந்திருக்க வேண்டும்.அன்னாந்து பார்க்க மனத்தில் தைரியமில்லை.பார்க்காமலும் இருந்திட முடியவில்லை. பயத்தால் ஒடுங்கிப் போன என் கைகள் நெஞ்சுக்குழியில் தான் தஞ்சம் புகுந்திருந்தன.என் முன் நின்றிருந்த கால்கள் அசையாமல்தான் தரையோடு பதுங்கியிருந்தது.

 

சுற்றும் முற்றும் என் கண்களை உருட்டிப் பார்த்தேன்.வழக்கம்போல அமைதிதான் தாண்டவமாடிக் கொண்டிருந்தது.நகுலன் என்னைப் பார்த்து நகைத்துக் கொண்டிருந்தான்.நாக்கை மடித்து இளித்துக் கொண்டிருந்தான்.எனக்கு ஆத்திர ஆத்திரமாக வந்தது.ஆனால்,உடலை அசைக்கவில்லை.சிறிது பிசுங்கினாலும் மேலே போனது கீழே வந்து தாறுமாறாக என்னைத் தாக்கிவிடும்.குனிந்தவாறு  நிமிரவும் முடியவில்லை.நகுலனை திட்டவும் முடியவில்லை.என் மீது வந்து அது விழுமா என்ற கேள்விக் குறியோடு முதுகின் வலி வேறு ஒரு பக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

 

என்னுடல் அசைவுக்குத் தான் அந்த கால்கள் காத்துக் கிடக்கின்றன.நேரமாகிக் கொண்டிருக்கிறது.இந்த மௌனத்தை இன்னும் எத்தனை மணிநேரம் கடத்திட முடியும்?கடக்கும் ஒவ்வொரு வினாடிகளும் ஓராயிரம் கேள்விகளை மனத்தில் எழுப்பிக் கொண்டிருந்தன.

எது நடந்தாலும் போராடி பார்த்து விடுவோம் என துணிந்து நின்றேன்.ஆசிரியரின் நெஞ்சுப் பகுதிதான் கண்களுக்குத் தெரிந்தது.

அவர் கடுங்கோபம் தில் இருப்பதை நெஞ்சுப் பகுதி உணர்த்திக் கொண்டிருந்தது.அது விரிந்த நிலைக்கு வந்தப் பின்னர் தன் ஆத்திரத்தை உள்வாங்கிக் கொண்டிருந்தது.நிமிர்ந்து பார்த்தேன்.அவரது முகத்தில் வியர்வைத் துளிகள்.அதிசியம்,ஆனால் உண்மை.கண்களை உருட்டித் திரட்டி வாசலைப் பார்த்துக் கொண்டிருந்தார்.அப்போதுதான் புரிந்தது.தலைமையாசிரியர் பக்கத்து கட்டிடத்திலிருந்து வேறொரு திசையை நோட்டமிட்டுக் கொண்டிருந்தார்.

“அப்பாடா….நா தப்பிச்சுட்டேன்….”

அப்படி நினைப்பதற்குள்

“ஒரு தடவ எழுப்பனா ஏந்திருக்க மாட்டியா…நாளைக்குப் பாரு ஒரு வாளி தண்ணி ஒன் மூஞ்சுல இருக்கும்…”

“கனவா…”

ஐயோ…என் தலை…அதிவேகத்தில் என் இரு கைகள் தலையைத் தொட்டன.தலை இருந்தது.ஆனால்,அது கணத்துப் போயிருந்தது.

 

அம்மா இட்டிலிக்குக் கோழிக் குழம்பைச் சூடாக்கிக் கொண்டிருக்கும் வாசனையை விட அம்மாவின் அதட்டல் நிறைந்த ‘காலை சுப்ரபாதம்’ என் உடலைக் கட்டிலில் சாய்க்க விடவில்லை.உறக்கம் இன்னமும் கண்களில் ஒளிந்து கொண்டிருக்கிறது.எழ முற்பட்டேன்.அதற்குள் அம்மா ஒரு வாளி தண்ணீரோடு அறையின் வாசலில் ‘காவல்’ காக்க ஆரம்பித்தார்.எழுந்த வேகத்தில் அம்மா வாளியைத் தொப்பென்று வைத்தார்.நிறைகுடம் தழும்பிய வாளியின் நீர் மரப்பமரப்பலகையின் கதவில்  ஆங்காங்கே தெறித்து விட்டிருந்தது.தீபாவளிக்குக் குளித்த கதவு பல மாதங்களுக்குப் பிறகு இன்றுதான் மீண்டும் குளித்தது.தேங்கிய தண்ணீர் தரையில் விரிந்து விரைவாக ஒன்றினைந்து கொண்டது.அது அம்மாவின் கைபக்குவம்தான் என்பேன்.மஞ்சள் நிறத்திலான அந்த ‘பூரோ’ சாப் கொண்ட கட்டி சவர்க்காரத்தை அடுப்பில் கொதிக்க வைத்து அதைத் தரையில் ஊற்றி கருப்பு புருசைக் கொண்டுத் தேய்ப்பார்.உடல் அலுத்துக் போகும்.ஆனால்,கழுவிய பின்னர் காலைப் பதிக்கும் போது ஜில்லென்று உடல் சிலிர்த்து போகும்.கிராமத்து வீட்டிற்கு அந்த ஜில்தான்  குளிரூட்டிக்கு ஈடானது.வழ வழவென தரை பளிங்குக் கல்லுக்குச் சவாலானது.ஆனால்,ஈரப்பாதத்தோடு நடந்து விட்டால் விழுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் தான்.கால்கள் ஜாக்கிரதை.

 

’ஒரு முறை ‘பூரோ’ சாப் தவிர்த்து வேறொரு சாப் சவர்க்காரத்தை வாங்கி வந்ததற்காக நான் விளையாடிக் கொண்டிருந்த கல்லாங்காயை அம்மா எடுத்து வீசியதில் நெற்றி வகிட்டில் பொட்டைப் போல வட்டவடிவமாகி வீங்கியது.

அம்மா என்னை நோக்கி விரைந்து கோபத்தோடு வருகிறாள்.அவளைப் பார்க்க கோயில் திருவிழாக்களில் பார்த்த நாடக நடிகைகள் போலவே இருந்தாள்‌.தலை விரி கோலமாய்,நெற்றியில் ஐம்பது காசு அளவில் குங்குமம்….இல்லை இல்லை ஸ்திக்கர் பொட்டு,ஆந்தையைப் போல் உருட்டிய கண்களோடு.அவள் கையில் சூலத்திற்குப் பதிலாக கோழிக் குழம்பிற்கு ஒத்துழைத்த அகப்பை.

 

வந்தவள் என் படுக்கை விரிப்பை வீரென்று இழுத்து இரு கைகளாலும் கசக்கி ஒரு மூலையில் வீசினாள்.நல்ல வேளையாக அவள் இழுத்த வேகத்தில் சுருண்டு கீழே விழும் முன் கட்டிலின் தற்காப்புக் கம்பியை பிடித்துக் கொண்டதில் வாயில் லேசாக ஓர் அழுத்தம்.

“ஏண்டி,ஏழு கழுத வயசாகுது….இன்னும் ஒனக்கு எவ்வளவுதான் சொல்றது…காலையிலே கருமாந்தரம்…பார்த்து தொலையனுமா?…”

 

அம்மா சொல்வதைப் போல இல்லை வயது எனக்கு.ஒன்பதுதான்.என்னைப் பார்த்து ‘கருமாந்திரம்’ என்கிறார்.நான் பிறந்த போது குலவிளக்கு என்று கொஞ்சி முத்தமிடுவாள் என அப்பத்தா பல முறை சொல்லியிருக்கிறாள்.ஆனால்,இப்பொழுதெல்லாம் என்னை அதிகம் திட்டித் தீர்க்கிறார்.நான் ‘பெரிய மனுஷி’ என அடிக்கடி நினைவுரைத்துகிறாள்.அப்பாவின் மடியில் உட்கார்ந்தால் அவள் பார்க்கும் பார்வையிலே எழுந்து விடுவேன்.சில சமயங்களில் அப்பா என்னை எழ விடமாட்டார்.அப்போதெல்லாம் என் மீதான ஆதிக்கம் அப்பாவின் மேல் அனலாக தெறித்து விடும்.அப்பா மட்டுமே என்னை சாமியாகப் பார்க்கிறார்.

வாயில் ஏற்பட்ட அழுத்தத்தைக் கூட அவள் பொருட்படுத்தவில்லை.அறைக் கதவை நனைத்த வாளியை எடுத்து வீசியெறிந்த மெத்தை விரிப்பின் ஓரமாகச் சென்று தன் இரு விரல்களால் மட்டுமே அதைத் தொட்டப் போது அம்மாவின் முகத்தைப் பார்த்தேன்.அவளது உடைந்த பல் வெளியில் தெரியும் அளவிற்கு முகத்தைப் சுளித்துக் கொண்டிருந்தாள்.மெத்தை விரிப்பு வாளிக்குள் நுழைந்ததும் வீர்கொண்டு நடந்தாள்.

பள்ளிக்கு நேரமாகிக் கொண்டிருந்தது.அவளிடத்தில் எப்படி சொல்வதென்று யோசிக்கும் முன்னரே அறையினுள் மீண்டும் நுழைந்து விட்டாள்.என்னையும் கவனிக்காது மெத்தையிடம் எதையோ தேடிக் கொண்டிருந்தாள்.கட்டிலின் விளிம்பில் பதுங்கியிருந்த நான் இன்னமும் கூனிக் குறுகிதான் இருந்தேன்.என்னிடத்தில் வந்து நின்றாள்.

 

“ம்மா…”

“பாத்ரும்ல சவர்காரத் தூள வெச்சுருக்கேன்.தோச்சி காயப்போடு.அப்பதான் புத்தி வரும் உனக்கு..ஸ்கூலுக்கு போக மாட்டன்னு வாயத் தொறந்த கிழிஞ்சிடும் வாய்…”

நான் பேச வேண்டியதை அவளே பேசிவிட்டு என்னைவிட அவள் உலகம் அறிந்தவள் என காட்டிவிட்டாள்.எனக்கு சுதந்திரம் உண்டு என்று அப்பா அடிக்கடிச் சொல்வார்.அக்கம் பக்கத்து வீட்டு நண்பர்களோடு விளையாட அனுமதியும் இருந்தது.வியர்வைத் துளிகள் என் உடல்களில் முத்து முத்தாகக் கோர்த்து உடலை நனைத்து முதுகில் வலிந்தோடி பாவாடை நனைக்கும் போதெல்லாம் ஓர் உற்சாகம்,புத்துணர்ச்சி எனக்குள் தாண்டமாடும்.பக்கத்து வீட்டு தேவாராஜனும் நானும் பல முறை ஓடிப் பிடித்து விளையாடுவதைப் பார்த்த அம்மா அதிகமாக கோபித்துக் கொள்வார்.இப்போதெல்லாம் அவனைப் பார்த்தாலே விலகி வந்து விடுகிறேன்.அவனும் அம்மாவைப் போலவே என்னை ‘பெரிய மனுஷி’யாகப் பார்க்கிறான்.நான் உடலளவில் ‘ஓமக்குச்சி’ என்று அப்பத்தா

“கண்ணு,ஆ காட்டு அப்பத்தா சோறு ஊட்டனா பிந்து கோசு மாதிரி ஆயிடுவ….”

என்று இன்னுமும் நிலாச் சோறு ஊட்டுவாள்.அப்போதும் கூட அம்மாவின் அப்பத்தா மீதுள்ள கோபம்  பாத்திரங்கள் பக்கம் திரும்பிவிடும்.

குளியலறை உள்ளே நுழைந்த நான் பீலியைத் திறந்து வாளியில் நீர் நிறையும் படிச் செய்து விட்டு யோசித்தவாறு  உடலைச் சுவற்றில் சரித்துக் கொண்டேன்.சில நாட்களாக எனக்குள் ஏற்படும் வயிற்று வலியைப் பொறுத்துக் கொள்ள இயலவில்லை.எனக்குள் ஏற்பட்டிருக்கும் உடலியல் மாற்றம் அவ்வப்போது வெறுப்பைத் தான் உண்டாக்கியது.அம்மாவிடம் வலியைப் பற்றி புலம்ப முடியவில்லை.

“அது அப்படிதான்.சும்மா கெட…நாங்க பார்க்காத வலியா?ரொம்ப அலட்டிக்காத…”

வாயடைத்து போய்விடுவேன்.தோழிகளிடம் சொன்னால் என் மீது இரக்கம் காட்டுவார்கள்.கொஞ்சமாவது ஆறுதல் கூறுவார்கள்.இப்படி வலி வரும்போதெல்லாம் பள்ளிப் பாடங்களுக்கு ‘விடுமுறை’யாகி விடுகிறது.இந்த முறை வலி கொஞ்சம் அதிகம்தான்.சுருண்டுப் படுத்து விடுகிறேன்.அம்மாவிடம் பேசத்தான் வழியில்லை.அப்பத்தா அத்தை வீட்டிற்குப் போய் நான்கைந்து நாளாகி விட்டது.அப்பத்தா அவர் உள்ளங்கையில் நல்லெண்ணையை ஊற்றி என் தொப்புள் குழியில் வைத்து தடவிக் கொடுப்பார்.என்னால் சிரிப்பை அடக்க முடியாது.’கெக்க புக்க’ என்று சிரித்து விடுவேன்.உடல் முழுவதும் கூசும்.

 

படார் படார் என்று குளியலறை கதவு தட்டப்பட்டது.என் உடல் விழித்துக் கொண்டது.அம்மா சொன்னபடியே துணிகளைத் துவைத்து உலர்த்தினேன்.அழுக்கு நீர் ஒன்றாக இணைந்து மூலையிலிருந்து ஓட்டைக்குள் வழிந்தோடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.அதில் என் வலி வழிகிறதா என்று.

 

இன்று அம்மாவின் இட்டிலியும் கோழிக் குழம்பும் மணக்கவே இல்லை.தட்டில் ஊற்றிய குழம்பில் சிறியதாகப் பிய்த்து இட்டிலியைப் தொட்டு வாயில் போட்டேன்.அது தொண்டைக்குழியில் இறங்க அம்மாவிடமிருந்து மீண்டும் ஓர் அதட்டல் வேண்டியதாயிற்று.எனக்கு விருப்பமான ‘மைலோ’ சூடுபறக்க வெறுமனே மேசையை நிரப்பி இருந்தது.

 

புத்தகங்களை என்னதான் சரிப்பார்த்தாலும் இன்று எனக்கான ஒன்று வான் உயர சென்றுதான் திரும்பும்.இப்போதெல்லாம் பாரதி தாத்தாவின்  முறுக்கு மீசை பிடிக்கவில்லை.

வீட்டை விட்டுக் கிளம்பும் போது

“அதான…எடுக்க மறந்துடவ…புடி…‌”

அம்மா கொடுத்த அந்த ‘பொட்டலத்தை’ எனக்குள் சுமக்க விரும்பவில்லை.இருந்தும் அதனோடு என் உடல் பயணித்துக் கொண்டிருக்கிறது.

 

 

 

 

 

 

 

 

error: Copyrights: Content is protected !!