கண்கள்

கண்கள்

ஆக்கம் : மு. துர்க்காதேவி

மலேசியா

‘என்ன ஒரு கண்ணு கிழக்கப் பார்க்குது, இன்னொரு கண்ணு மேற்கப் பார்க்குது…உன்னுடையக் கண்ண தினமும் பார்க்கறப்போ எங்களுக்குச் சிரிப்புச் சிரிப்பா வருது போ’ என்று பவானி ஐந்து சரோஜா வகுப்பிற்குள் நுழைகையில், அவளின் வகுப்பு மாணவர்கள் அரட்டை அடித்துக் கொண்டு இருந்தனர். எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் தன் இடத்தில் சென்று அமர்ந்தாள் பவானி.

இறைவன் அனைத்தையும் பவானிக்கு அழகாகப் படைத்து விட்டு, கண்களில் மட்டும் குறை வைத்துள்ளானே என்று தினமும் பவானியின் அம்மா பூஜை அறையில் முறையிட்டுக் கொண்டிருப்பார். பவானிக்கு உடன் பிறப்புகளென யாரும் கிடையாது. தன் உறவினர் சிறுமிகளுடன் தான் விளையாடிக் கொண்டிருப்பாள். பின்பு, பள்ளியில் அவள் வகுப்பில் பயிலும் குணவதி, கனகா என்ற இருவருடன் நல்ல நட்பைக் கொண்டிருப்பாள். அவளின் கண்களைப் பற்றிக் குறை கூறி வெடைப்பதற்கே ஒரு கூட்டம் அவளின் வகுப்பில் இருக்கும்.

வகுப்பில் ஆசிரியர் வராத சில நேரங்களில், மாணவர்கள் ஒன்றாகக் கூடிக் கொண்டு ஏதேனும் விளையாடுவது, கதைகள் பேசுவது போலாக இருக்கும். அதனை ஒருபோதும் பவானி அனுபவித்ததுக் கிடையாது. அவளையும் சேர்த்துக் கொள்வது போல் வந்து, விளையாடிக் கொண்டிருக்கையில் அவளின் கண்களைக் கேலி செய்து பிறகு மன்னிப்புக் கேட்பார்கள். அவளுக்கு மனம் வேதனையாக இருக்கும். அதனால், அவள் ஆசிரியர்களிடமே அதிகமாகப் பழகுவாள்.

பவனிக்குத் தோடு குத்துவதற்காகக் கோவிலுக்கு அழைத்துச் சென்றிருந்தனர். அவளும் மகிழ்ச்சியாகவே அக்கோவிலைச் சுற்றிச் சுற்றி ஓடி விளையாடிக் கொண்டிருந்தாள். அவளின் தாயார் அவளை மடியில் அமர வைத்திருந்தார். அப்போது ‘அம்மா….அங்க பாருங்க அந்த பிள்ளையோட கண்ணு ஏம்மா இப்படி இருக்கு…பாக்கவே சிரிப்பா இருக்கு’ என்று அவளின் அருகில் அமர்ந்திருந்த ஒரு சிறுமி அவளின் அம்மாவிடம் முணுமுணுத்துக் கொண்டிருந்தாள். அவள் பேசியது பவானியின் காதில் விழுந்தது. அச்சிறுமியை முறைத்தாள்; குத்துவதைப் போல கையையும் ஓங்கினாள். ஆனால், அச்சிறுமியோ சிரித்துக் கொண்டு ஓடி விட்டாள்.

‘அம்மா…வலிக்குதும்மா…’ என்ற சத்தம் கோவிலிலுள்ளவர்களை அலறச் செய்தது. காது வலியில் அப்படியே தன் அறையில் படுத்திருந்தாள். அம்மா கர்ணப்புராத் தைலத்தை எடுத்து வந்து தோடு குத்திய இடத்தில் ஊற்றினார். தன் அம்மாவின் மடியில் படுத்துக் கொண்டு, ‘ஏம்மா…எல்லாருமே என்னோட கண்ணப் பார்த்துச் சிரிக்கிறாங்க, கிண்டல் பண்ணுறாங்க…எனக்குக் கோபமா வருதும்மா…என்னோட கண்ணு மட்டும் ஏன் இப்படி இருக்கும்மா’ என்று தன் அம்மாவிடம் கேள்விகளை அடுக்கினாள். ‘பவானி நீ அழகும்மா…இறைவன் என்னமோ உன்னோட கண்ண இப்படி படைத்து விட்டான். ஆனால், வாழ்க்கையில் முக்கியம் கண்கள் இல்லம்மா…நம்ம எப்படி ஒன்ன பார்க்கிறோம், செய்யுறோம் அதுல தான் இருக்கு…இப்ப உனக்குப் புரியாது, ஆனால் ஒரு நாள் உனக்குக் கண்டிப்பா புரியும்மா’ என்று அம்மா கூறிக்கொண்டிருக்கையில், அசதியில் அப்படியே உறங்கி விட்டாள்.

பள்ளி முடிந்து ஆண்டு விடுமுறைக்கு இன்னும் சிறிய நாட்களே உள்ளது. மாணவர்கள் தேர்வுக்குத் தயாராகினர். தேர்விற்காக மேசைகள் அனைத்தும் தனித்தனியாகப் போடப்பட்டன. தேர்வுத் தாளும் வழங்கப்பட்டது. பவானி அருகிலிருந்த ஒரு மாணவன் ஆசிரியரை அழைத்து, பவானி என்னைப் பார்த்து எழுதுகிறாள். அவள் இடது கண் என் பக்கம் பார்ப்பது போல உள்ளது என்றான். ஆசிரியர் உடனே ‘பவானி நீ சொந்தமா செய்கிறியா, இல்ல விமல பார்த்துச் செய்கிறியாம்மா’ என்று கேட்டதற்கு ‘ நான் ஏன் அவனோட விடையைப் பார்க்கப் போகிறேன்…எனக்கு நல்ல தெரியுமே டீச்சர் இதோட விடையெல்லாம்’ என்று வெகுளித்தனமாகப் பேசினாள். ‘சரி நீ போய் பின்னால் உட்கார்ந்து செய் மா’ என்று பவானியைப் பின்னாடி அமர வைத்தார்.

‘டிரீங்…டிரீங்…’ என்று ஓய்வு மணி ஒலித்தது. மாணவர்கள் சிற்றுண்டிச் சாலைக்குச் சென்றனர். காலையில் மீதமுள்ள ‘ஆர்.எம்.டி’ உணவைச் சில மாணவர்கள் எடுத்துக் கொண்டு போய் தன் நண்பர்களுடன் அமர்ந்தனர். பவானி தனியாகவே அமர்ந்திருந்தாள். ‘விஜயா…அவ பாரு நம்ம சாப்பிடுவதையே பார்த்துக்கிட்டு இருக்கா…நான் எப்படி சாப்பிடுவேன் இப்போ’ என்று மதியழகன் கூற மற்ற மாணவர்களும் அவளைக் கிண்டல் செய்து கொண்டு சிரித்துக் கொண்டிருந்தனர். மிகுந்த கோபத்திற்குள்ளாகி பவானி தன் கையில் வைத்திருந்த பெண்சில்களை ஒன்றாகக் கட்டி, அனைவரது கைகளிலும் கீறி விட்டாள். வலியால் அம்மாணவர்கள் துடித்துடித்தனர். வேகமாகத் தன் உணவுத் தட்டை வைத்து விட்டு, வகுப்பிற்குள் சென்று தன் இடத்தில் அமர்ந்து கொண்டாள். ஆசிரியர்கள் விடயமறிந்து அவளின் பெற்றோரைப் பார்க்க வேண்டுமென கட்டளையிட்டனர். நடந்தவற்றிற்கு அவளது பெற்றோர் மன்னிப்புக் கேட்டனர். வீட்டில் அவளது அப்பா அவளைக் கண்டித்துக் கொண்டிருந்தார். பவானியோ வெளியில் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த பறவையையே பார்த்துக் கொண்டு காலாட்டிக் கொண்டிருந்தாள். அவள் அம்மா அவளின் தலையைக் கோதி விட்டார்.

ஆண்டு விடுமுறை நெருங்கிக் கொண்டிருப்பதால், ஐந்தாம் வகுப்பு மாணவர்களைச் சுற்றுலா கூட்டிச் செல்ல இருந்தனர். பவானியைப் பல ஆசிரியர்கள் வற்புறுத்தி அழைத்தனர். ஆனால், அவளோ ஒற்றைக் காலில் தான் வரப்போவதில்லை என்று நின்றாள். குணவதி, கனகா, சுமதி டீச்சரின் அறிவுரையினால் அச்சுற்றுலாவிற்கு வருவதாக கூறினாள். தைப்பிங் மிருகக்காட்சிச் சாலைக்குச் சுற்றுலா ஏற்பாடு செய்திருந்தனர். அங்கு மிருகங்களைக் கண்டு மாணவர்கள் மகிழ்ச்சியாக இலைகள், பூக்கள் போன்றவைகளைக் கொடுத்து விளையாடிக் கொண்டிருந்தனர். ஆனால், பவானி கூண்டிற்குள் இருக்கும் மிருகங்களைக் கண்டு வருத்தமடைந்தாள். ஆசிரியர் பறவைகளைக் காண மாணவர்களை அழைத்துச் சென்றார். அங்கு அனைத்துப் பறவைகளும் கிளைகளில், மரங்களில் கூட்டம் கூட்டமாக அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தது. ஒரு பறவை மட்டும் தன் முகத்தைக் காட்டாமல் பின்புறம் தனியே ஒரு கிளையில் அமர்ந்திருந்தது. அதனைக் காண சென்றாள் பவானி. அது பருந்து ஆகும். பார்ப்பதற்குப் பயங்கரமாக இருந்தது. இதுவரையில் புத்தகத்தில் மட்டுமே பார்த்து இன்று நேரில் பார்த்தாள். முதலில் நேராகப் பார்த்தாள். அதன் பின்பு, மெல்ல நகர்ந்து இடது புறம் செல்லுகையில் அதன் இடது கண் மட்டும் அவளை நோக்கியது. வலது கண் அந்தப் பக்கம் இருந்தது. மாணவர்கள் அந்த பறவையைக் கண்டு அருகில் கூடச் செல்லாமல் வேறு இடத்திற்கு ஓடி விட்டனர். பவானி மட்டும் அதனை வெறித்துக் கொண்டிருந்தாள்.

 

error: Copyrights: Content is protected !!