குறியீடு: முதல் பரிசுக் கதை 2021

முதல் பரிசு 2021

 

ஆக்கம்: திவ்யா சுப்ரமணியம்

மலேசியா

குறியீடு

“டேய் எவ்வளவு நேரமா கேள்வி கேட்குறேன். பதில் சொல்லாம கனவு காணுறீயா என்ன? டேய்…”, என்று உரக்க கத்திக் கொண்டு இருந்தார் புதிதாக வந்த காட்சி கலை கல்வி ஆசிரியர். எதையும் காதில் வாங்கி கொள்ளாமல் கண்ணன் மேசையின் மீது தலை சாய்த்துப் படுத்திருந்தான். இறுதி வரிசையில் அமர்ந்திருந்ததால் அவனுக்குச் சரியாக விளங்கவில்லையோ என்று எண்ணிய ஆசிரியர் அவனை நோக்கி நடந்து வந்தார். மற்ற மாணவர்கள் சிரித்துக் கொண்டு இருக்கும் சத்தத்தில் கண்ணன் கண் விழித்தான். ஆசிரியர் அவனை நெறுங்கி வந்து அவனுடைய சட்டையிலிருந்த பெயர் அட்டையைப் பார்த்தார். அவனும் அவரைப் பார்த்தான். “ஓ நீ தான் கண்ணனா? சரி சரி”, என்று கூறிவிட்டு நகர்ந்தார். இதற்கு முன் பாடம் போதித்த காட்சி கலை ஆசிரியர் கொடுத்த வீட்டுப்படத்தை மாணவர்களிடமிருந்து வாங்கி கொண்டிருந்தார். எப்பொழுதும் போல செழியன் வீட்டுப் பாடத்தைச் செய்யவில்லை. வண்ணம் தீட்டாத தன்னுடைய ஓவியத்தை புத்தகப் பையிலிருந்து எடுக்க பயந்தான். இந்த வாரமும் ஆசிரியர் வரமாட்டார்; தப்பித்துவிடலாம் என்று எண்ணிய செழியனுக்கு ஏமாற்றமே. வண்ணம் தீட்டிய ஓவியத்தை வீட்டில் வைத்துவிட்டாதாக செழியன் ஆசிரியரிடம் மழுப்பினான். முதல் முறையாக அந்த வகுப்பிற்குப் பாடம் போதிக்க வந்ததால் ஆசிரியர் இதுவே முதலும் கடைசியுமாக இருக்க வேண்டுமென கூறி அவனை மன்னித்தார்.

வழக்கம் போல புதிய வண்ணம் தீட்டும் தாட்களை ஆசிரியர் மாணவர்களுக்கு வழங்கினார். அந்த வண்ணம் தீட்டும் தாள் இறுதி வரிசையில் அமர்ந்திருந்த கண்ணனின் மேசைக்கும் வந்து சேர்ந்தது. ஆசிரியர் எந்த நிறத்துடன் கலந்தால் எந்த நிறம் புதிதாக பிறக்கும் என்பதைத் தெளிவாக விளக்கிக் கொண்டிருந்தார். மாணவர்களும் ஆர்வமுடன் ஆசிரியர் சொல்லிக் கொடுப்பதைப் பின்பற்றி வண்ணம் தீட்டினர். வண்ணப் பென்சில் இல்லாத காரணத்தால் செழியன் அங்கும் இங்கும் போராடி வண்ண பென்சிலைக் கடன் வாங்கி வண்ணம் தீட்டினான். கண்ணனோ பள்ளியின் இறுதி மணி ஒலிக்காக காத்திருந்தான். கண்கள் ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்க அவன் எதிர்பார்த்த கடைசி மணி அடித்தது.

கண்ணன் தன்னுடைய புத்தகப்பையை மாட்டிக் கொண்டு விரைவாக நடந்தான். தன்னுடைய நண்பன் செழியனுக்குக் கூட சொல்லிக் கொள்ளாமல் வீட்டிற்கு விரைந்தான். அம்மாவின் மோட்டார் வண்டியில் ஏறிக் கொண்டு அம்மாவை இறுக்கி பிடித்துக் கொண்டான். அம்மா நேராக வீட்டிற்குப் போகாமல் மளிகைக் கடையில் நிறுத்தினார். மோட்டார் வண்டியிலிருந்து இறங்கி கடைக்குள் செல்லும் முன்பு அம்மாவிடம் வண்ண பென்சிலை வாங்கி தருமாறு கூறினான். அம்மா அவன் கூறியதைப் பொருட்படுத்தவில்லை. அம்மா நேராக ரொட்டி வைத்திருக்கும் இடத்தை நோக்கி நடத்தார். “முதல்ல உனக்குப் பசியாற சாப்பாடு வாங்குவோம். நாளைக்கு உனக்குக் கொடுத்து அனுப்ப வீட்டுல ஒன்னுமே இல்ல. மிச்ச காசு இருந்த அப்புறம் பார்ப்போம்”, என்று கூறி ரொட்டி பையையும் பால் மாவையும் எடுத்துக் கொண்டார். அம்மா எப்பொழுதும் சொல்கின்ற அதே வார்த்தைகளைக் கேட்டதும் இன்றும் வண்ண பென்சில் வாங்குவதற்கு வாய்பில்லை தான் என்று எண்ணினான். “வேற எதாவது வேணுமா?” என்று கடைக்காரர் கேட்டது கண்ணனுக்குச் அன்று சாதகமாக அமைந்தது. அம்மா எதுவும் சொல்லும் முன் கண்ணன் முந்திக் கொண்டான். மீண்டும் தன் அம்மாவை நோக்கி வண்ண பென்சிலை வாங்கி தருமாறு கெஞ்சினான். அம்மாவும் வேறு வழியில்லாமல் வண்ண பென்சிலை வாங்கிக் கொடுத்தார்.

அவன் அளவில்லா மகிழ்ச்சியில் மூழ்கினான். வீட்டிற்கு வந்ததுமே புத்தகப்பையை எடுத்து சோபாவின் மீது எறிந்துவிட்டு தன்னுடைய மேசையில் பரப்பி வைத்திருந்த வண்ணம் தீட்டும் தாட்களைப் பார்த்து இரசித்துக் கொண்டிருந்தான். “வீட்டுக்கு வந்தோன குளிச்சிட்டு சாப்பிடனும். போ அதே முதல்ல செய்”, என்ற அம்மாவின் குரல் அவன் செவிகளுக்கு எட்டவில்லை. எண்ணம் முழுதும் அவனுடைய வண்ணம் தீட்டும் தாட்களின் மீது இருந்தது. “அங்க எதாவது கிறுக்கி வைச்சிருந்தா கலரை வாங்கி மறைச்சி வெச்சிருவேன். ஒழுங்க முதல்ல போ குளி”, என்று இரண்டாவது முறையாக அம்மா கத்தியது கண்டிப்பாக அவனின் காதில் விழுந்தது. அவன் விரைந்து குளித்துவிட்டு சாப்பாட்டை முழுங்கினான். “பொறுமையா சாப்பிடு. உனக்கு என்ன அவசரம் இப்போ? நீ அடம் புடிச்சு கலர் பென்சில் வாங்கி கொடுத்திருக்கேன். அங்கயும் இங்கயும் கிறுக்கி இருந்துச்சு அவ்வளவு தான்”, என்று அம்மா கூறியதைக் கேட்டுக் கொண்டு சாப்பாட்டை முழுங்கினான்.

மீண்டும் தன் மேசையிடம் வந்து அமர்ந்துக் கொண்டான். அவன் இதற்கு முன் வண்ணம் பூசிய ஓவியங்களைப் பார்த்துக் கொண்டிருந்தான். வண்ணங்கள் பூசினால் ஓவியத்திற்கு உயிர் கொடுக்க முடியும் என்று அவனுக்கு மட்டுமே தெரியும். இன்று அவன் முள்ளங்கிக்கு உயிர் கொடுக்க வேண்டிய நாள். ஆனால், எப்படி உயிர் கொடுப்பது என்றனவனுக்குள் கேள்வி எழுந்தது. அதற்குக் காரணம் அந்த ஓவியத்தில் முள்ளங்கி வெட்டப்பட்ட நிலையில் மேசை மீது கத்தியுடன் வைக்கப்பட்டிருப்பதைப் போல இருந்தது. ஒரு வேளை வண்ணம் தீட்டி விட்டால் அந்த முள்ளங்கிக்கு உயிர் வந்திடும்; கத்திக்கும் உயிர் வந்திடும். அது ஒர் ஓவியம் மட்டுமே என்று உணர்ந்தும் ஐயோ பாவம் முள்ளங்கி என்று ஆழ்ந்த யோசனையில் கண்ணன் மூழ்கியிருந்தான். சிறிது நேரத்தில் அவனின் கவலை அவனுக்கே சிரிப்பை மூட்டியது.

கண்ணன் வண்ண பென்சிலைப் புத்தகப் பையிலிருந்து எடுத்தான். அதற்குள் செழியனின் வீட்டிலிருந்து யாரோ அடி வாங்கும் சத்தம் கேட்டது. கண்ணன் விரைந்து சமையலறைக்கு ஓடினான். வீட்டுன் பின்புறமிருந்து கேட்டால் பின்னால் வீட்டிலிருக்கும் செழியனின் வீட்டில் நடப்பவற்றைத் தெரிந்துக் கொள்ளலாம். செழியனின் வீட்டுப் பின் கதவு மூடியிருந்தாலும் வீட்டினுள் இருந்து சத்தம் பலமாகவே வந்தது. “எத்தனை தடவ வாங்கிக் கொடுத்தாலும் ஒழுங்கா பாத்துக்க மாட்டுற. காணம ஆகிட்டு இருக்க. இனிமேல வீட்டுப்பாடம் செய்யாம வந்து என் மானத்தை வாங்கிறாத”, என்று தன் கோபத்தைக் கொட்டி தீர்த்தார் புதிதாக வந்த காட்சி கலை கல்வி ஆசிரியராகிய செழியனின் அப்பா. அவருடைய குரலில் இருந்தே உச்சக்கட்ட கோபம் தான் என்று கண்ணன் தெரிந்துக் கொண்டான். கண்ணனின் மனம் கனத்தது. உடனே தன் நண்பனைப் பார்க்க வேண்டுமென எண்ணினான். உடனே புத்தகப்பையை எடுத்துக் கொண்டு செழியனின் வீட்டிற்குக் கிளம்பினான்.

கண்ணன் செழியனைத் தான் பார்க்க கிளம்புகிறான் என்று அம்மா தெரிந்துக் கொண்டார். “டேய் அங்க இப்போ போகதே. எதாவது நனைச்சிக்க போறாங்க”, என்று அவனைத் தடுத்து நிறுத்த அம்மா கூறினார். “நான் படிக்க தான் மா போறேன்”, என்று கூறிவிட்டுக் கிளம்பினான். வீட்டின் வெளியே வரைக்கும் சென்ற அவனை அம்மா நிறுத்திட விரும்பவில்லை.

கண்ணன் வீட்டின் முன் வந்து செழியனைப் பெயர் சொல்லி அழைத்தான். செழியன் அழுகையை நிறுத்திவிட்டு எதுவும் நடக்காதது போல கதவைத் திறந்து கண்ணனை உள்ளே அழைத்தான். இருவரும் செழியனின் அறைக்குச் சென்றனர். “என்ன பாடம் சொல்லிக் கொடுக்கனும்”, என்று வறண்ட முகத்துடன் செழியன் கேட்டான். கண்ணன் எதுவும் பேசாமல் புத்தகப்பையிலிருந்து வண்ண பென்சிலை எடுத்துக் கொடுத்தான். செழியன் அதிர்ச்சி அடைந்தான். “அப்போ என்னுடைய கலர் பென்சிலை நீ தான் எடுத்தியா? ஏன் என்கிட்ட சொல்லல? உன்னால தான் ராதா டீச்சர்கிட்ட வாங்கி கட்டிருக்கேன். இன்னிக்கு என் அப்பாகிட்டயும் வாங்கி கட்டனேன்”, என்று சற்று கோபத்துடன் கேட்டான். கண்ணன் அடுத்து என்ன சொல்ல வேண்டும் என்று தெரியாமல் அமைதியாகவே இருந்தான். சிறு அமைதிக்குப் பின், கண்ணன் தன் தவற்றை ஒப்புக் கொண்டான். அவன் தன் பக்கமிருந்த நியாயத்தை எடுத்துரைக்க முயன்றான். “அம்மா எனக்கு கலர் பென்சில் வாங்கி கொடுத்தோன உங்கிட்ட கொடுத்தறலாம்னு நனைச்சன்”, என்று கூறினான்.

“ஆமா உனக்கு தான் எந்தக் கலரையும் பார்க்க முடியாதே. கருப்பு வெள்ளைய தவிர.. அப்புறம் எதுக்கு உனக்கு. நீ தான் கலரிங் பாடமே செய்யமாட்டியே?” என்று செழியன் கன்ணனின் முகத்தைப் பார்த்துக் கேள்வி கேட்டான். “உன்னோட கலர் பென்சில் பேட்டியில மட்டும் தான் ஒவ்வொரு கலர் பென்சில் மேல என்ன கலர்னு எழுதி வெச்சிருக்கே. அதே பார்த்துத் தான் எல்லாத்தையும் கலர் பண்ணுவேன். அதனால தான் உன்னோட கலர் பென்சில எடுத்துகிட்டேன்,” என்று சோகமாக கூறினான். கண்ணன் செழியனின் வண்ண பென்சிலை அவனிடமே திருப்பிக் கொடுத்தான். “பரவாயில்லை. நீயே வெச்சிகோ”, என்று செழியன் இரக்கத்துடன் கூறினான். “அப்போ என் அம்மா இன்னிக்கு வாங்கி கொடுத்த கலர் பென்சில நீ வைச்சிகோ”, என்று கூறி வலுக்கட்டாயமாக புதிய வண்ண பென்சிலை செழியனின் கையில் கொடுத்தான். செழியனின் அப்பா அமைதியாக அவர்களைப் பார்த்துவிட்டு நகர்ந்தார்.

 

error: Copyrights: Content is protected !!