சமம்: இரண்டாவது பரிசு பெற்றக் கதை பரிசு

சமம்

முதல் பரிசு 2021 அனைத்துலச் சிறுகதைப் போட்டி

 

ஆக்கம் : சுமத்ரா அபிமன்னன்

மலேசியா கட்டிலிருந்து இறங்கி கால்களைத் தரை மீது வைத்ததும்தான் கால்கள் வழுவிழந்து இருப்பதை உணர்ந்தேன். எத்தனை நாட்களை இப்படியே களித்தேன் என்று தெரியவில்லை. அப்பா வந்ததும் தான் கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே சற்று தாவி மீண்டும் கட்டிலில் உட்கார்ந்து கால்களைத் தொங்கவிட்டேன்.

தாதியர்கள் மிக மும்முரமாக தங்கள் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். வேளை தவறாமல் மருந்தும், உணவும் கொடுத்து எந்த பலனும் எதிர்ப்பார்க்காமல் நோயாளிகளைக் குணப்படுத்த மட்டுமே பம்பரமாக சுழன்று கொண்டிருக்கும் தாதியர்களைப் போற்ற வேண்டும் என்று ஆசிரியை அடிக்கடி பள்ளியில் நினைவுறுத்தியதை நினைவு கூர்ந்தேன். மருத்துவமனையில் நோயாளிக அனுமதிக்கப்பட்ட பின் தான் ஆசிரியரின் வார்த்தையில் மறைந்துள்ள உண்மையை உணர முடிந்தது.

“கிளம்பலாமா குமாரு” மருத்துவ செலவைத் தொகையைக் கட்டிவர சென்ற அப்பா. உடல் மட்டுமின்றி மனமும் சோர்ந்திருந்தது. ஆனால் மனத்தில் எங்கோ ஒரு மூலையில் நம்பிக்கை மட்டும் விடாமல் என்னை நகர்த்தி கொண்டிருந்தது.

“உண்மையாகவே நான் இன்னும் பார்க்கலையா குமாரு?” என் முக வாட்டத்தைப் பார்த்ததும் அப்பா அவராகவே பேச ஆரம்பித்தார். காரை கிளப்பினார். “ஓகே பா. பரவாயில்லை. இப்போ நேரா மாமா வீட்டுக்குப் போய் பார்ப்போம் பா. பாவம் பா?” என்று கூறிக் கொண்டே அப்பாவின் முகத்தைப் பார்த்தேன்.

எந்த ஒரு அசைவுமின்றி அப்பா காரைச் செலுத்திக் கொண்டிருந்தார். அன்றைய காலைப் பொழுது நினைவிற்கு வந்தது.

“ஆய்யோ இந்த சத்தத்தைக் கேட்கவே பிடிக்கலை… இந்த பையன்  நான் சொன்ன கேட்குறானா?” சரியா என் அறைக்குப் பக்கத்திலே வச்சுட்டான்… ராத்திரியெல்லாம் ஒரே சத்தம். தூக்கமே வரலை. இன்னிக்கு எப்படியாவது ஒரு முடிவு கட்டணும்” முனகி கொண்டே சமையலறைக்குச் சென்றார் அம்மா.

“குமாரு, ஸ்கூலுக்கு மணியாச்சு , எழுந்திரு” அம்மாவின் குரல் கேட்டதும் உடனே எழுந்து வீட்டின் கதவை திறந்தேன்.

“ஆரம்பிச்சுட்டியா? ராத்திரியெல்லாம் ஒரே சத்தம். என்னைத் தூங்க விடலை… உங்களுக்கெல்லாம் என்னைக் கஸ்டப்படுத்தனும்.. எவ்வளவோ சொல்லியும் கேட்க மாட்டிறியே, உங்கப்பா வரட்டும். அவரு மட்டும் நான் சொன்னா கேட்ப்பாரா?” என்று கத்திக் கொண்டே தன் அன்றாட வேலைகளில் கவனம் செலுத்தினாள்.

இதற்கு மேல் வெளியே போனால் அம்மாவின் சத்தம் அதிகமாகி விடும் என்பதை உணர்ந்து குளிக்கச் சென்றேன். எல்லாம் பார்க்க எவ்வளவு அழகா இருக்கு, ஏன் இந்த அம்மாவுக்குப் பிடிக்கலை.. நான் வீட்டுக்கு கூட்டிட்டு வந்திலிருந்தே சத்தம் போட்டுகிட்டு தான் இருக்காங்க. என்ன வெறுப்பு அவங்களுக்கு? எப்படியாவது பள்ளிக்குப் போவதற்கு முன்பு குட்டிகளுக்குப் பால் கலக்கி வைக்க வேண்டும்… நினைக்கும் பொழுதே ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. அழகழகா வெள்ளை பழுப்பு நிறத்துல மூன்றுக் குட்டிகள்.

காலை மணி 6.50 ஆகிவிட்டது. பால் கலக்க வேண்டும். அம்மா இன்னமும் சமையலறையில தான் இருக்கிறார். மனதில் தைரியத்தை வர வைத்துக் கொண்டு “அம்மா, குட்டிகளுக்குப் பால் கலக்கனும்” என்றேன்.

அம்மாவின் பார்வை என்னைச் சுட்டெரிக்கும் அளவு உஸ்ணமானது. அவரின் பார்வையைப் பொருட்படுத்தாமல் மூன்று கரண்டி மாவு பவுடரை ஒரு குவளையில் போட்டு தண்ணீர் ஊற்றி கலக்கி கொண்டு வெளியே சென்றேன். என்னைப் பார்த்ததும் என் செல்லப்பிராணி பொன்னிக்கும் அதன் குட்டிகளுக்கும் ஒரே மகிழ்ச்சி… குட்டிகள் பிறந்து இன்றோடு 2 வாரம் ஆகிவிட்டன. இப்பொழுது பாலை நக்கி குடிக்க பழகி விட்டன. குட்டிகளின் பெட்டியைச் சுத்தம் செய்து,புது துணி மாற்றி விட்டு தட்டில் பாலை ஊற்றி அருகில் வைத்தேன். குட்டிகள் தங்கள் பிஞ்சு நாக்கில் பாலை நக்கி குடிக்கும் அழகைப் பார்க்க பார்க்க பிரமிப்பாக இருந்தது.

பள்ளிக்கு மணியாகி விட்டது. இப்பொழுது நடந்தால்தான் சரியாக 7.20க்குப் பள்ளியை அடைய முடியும். பள்ளிக்குச் சென்று வரும் வரை மனமெல்லாம் பொன்னியின் மீதும் அதன் அழகான குட்டிகளின் மீதும் தான் இருக்கும். அம்மாவினால் குட்டிகளுக்கு ஏதாவது ஆபத்து வந்து விடுமா என்ற பயம் ஒரு பக்கம். ஆனால் அம்மா மிகவும் நல்லவர். எந்த உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்த கூடியவர் அல்ல. ஆனால் ஏன் பொன்னியையும் குட்டிகளையும் வெறுக்கிறார்?

ஒருநாள் பள்ளி முடிந்து வீடு திரும்பும் வழியில்தான் பொன்னியை முதலில் சந்தித்தேன். ஒரு காலில் அடிப்பட்டு வயிற்றில் குட்டிகளுடன் பார்த்ததும் என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் தேங்கின. ஓடி சென்று பொன்னியைத் தூக்கி கொண்டு வீட்டிற்கு எடுத்து சென்றேன். அப்பொழுதே நான் அறிந்ததுதான்.

அம்மா இதை விரும்பமாட்டார். பல நாட்களாக நாய் வளர்க்க வேண்டும் என்ற என் ஆசையை அம்மாவுக்காகத்தான் நான் விட்டுகொடுத்தேன். ஆனால், அன்று ஒரு தைரியம். ஓர் உயிர் கஸ்டத்தில் இருக்கும் போதும் அம்மா அப்படி நினைக்க மாட்டார் என்ற எண்ணத்தில் வீட்டிற்கு எடுத்து சென்றேன். ஆனால் வீட்டில் பூகம்பமே வெடித்தது. இருந்தாலும் இந்த முறை நானும் சற்று பிடிவாதமாகவே இருக்கவும் அம்மாவினால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அப்பாவும் எனக்கு சாதகமாக இருக்கவும் அம்மாவின் ஆத்திரம் பொன்னியின் மேல் பாய்ந்தது.

கடந்த இரண்டு வாரமாக அந்த கோபத்தைப் பங்கு போட்டு கொள்ள 3 அழகான குட்டிகளை ஈன்றெடுத்தாள் பொன்னி. அந்த அழகான குட்டிகளைப் பார்த்ததும் அம்மாவின் கோபம் குறையும் என்று நினைத்த எனக்கு ஏமாற்றம் தான்…. மாறாக மேலும் அதிகரித்ததுதான் மிச்சம். ஏன் அனைவரிடமும் மிகவும் அன்பாக பழகக் கூடிய அம்மாவுக்குப் பொன்னியையும் குட்டிகளையும் பிடிக்கவில்லை. அது பிராணியாக இருந்தாலும் அதுவும் உயிர்தானே. வலி அனைவருக்கும் சமம் தானே. அம்மாவும் அதை புரிந்து கொள்ளும் காலம் வரும். பள்ளிக்கு வேகமாக நடந்தேன்.

பள்ளி முடிந்து வீடு திரும்பியதும் முதலில் சமையலறைக்குதான் சென்றேன். பொன்னிக்கு சோறு போட்டு விட்டுதான் நான் குளிக்க செல்வது வழக்கம். அம்மாவைச் சமையலறையில் காணவில்லை. அம்மா வரும் வரை காத்திராமல் சோற்றைப் போட்டுக் கொண்டு பின்னால் சென்றேன். பொன்னி மிகவும் வாடிய முகத்துடன் அமர்ந்திருந்தது. பெட்டியில் குட்டிகளைக் காணோம். மனத்திற்குள் பயம் கலந்த படபடப்பு….

“அம்மா…. அம்மா”…கத்தினேன்….அம்மாவைக் காணோம்…. “பொன்னி! பொன்னி! எங்கே குட்டிகள் எங்கே போச்சு? யாராவது வந்தாங்களா? சொல்லு” பொன்னியிடம் கேட்டேன்… பதிலைக் காணோம்.. எப்படி பேசும்? அய்யோ பதற்றத்தில் என்ன செய்கிறேன் என்றே தெரியவில்லை….. வீட்டிற்குள் ஓடினேன்… அம்மா குளியலறையிலிருந்து வெளியே வந்தார்…. “என்னடா சத்தம்” ஒன்றும் நடக்காதது போல கேட்டார்.

“அம்மா குட்டிகளைக் காணோம்…எங்கம்மா?” என்றேன்… “ஓ அதுவா! அதுக்கா இவ்வளவு சத்தம்? உங்க மாமா வந்தாரு.. நாய்க் குட்டி வேணும்னு கேட்டாரு . அதான் கொடுத்தேன்.” என்றார் அலட்சியமாக.

கோபம் ஒரு புறம் கவலை கலந்த ஏமாற்றம் ஒரு புறம்.. என் கண்களின் தாரை தாரையாக  வழியும் கண்ணீரையும் பொருட்படுத்தாமல் அம்மா உள்ளே சென்று விட்டார். அம்மாவை விடாமல் துரத்தினேன்.

“அம்மா, அதுங்க குட்டிங்கம்மா. இப்பத்தான் 2 வாரம் மா…அதுக்குள்ள ஏம்மா அம்மாவையும் பிள்ளைங்களையும் பிரிச்சிங்க?” நானும் அம்மாவைப் பின் தொடர்ந்தேன்.

“என்னாது, அம்மா பிள்ளைங்களா? அது நாய்க் குட்டிங்கடா…” அலட்சியமான சிரிப்புடன் வந்த பதில் என்னை மேலும் காயப்படுத்தியது. கட்டிலில் சாய்ந்தேன். அழுதேன் அழுதேன்…அப்படியே தூங்கி போனேன். நேரம் போனதே தெரியவில்லை.

கண்களைத் திறக்க முயன்றேன்..முடியவில்லை. கைகளைத் தூக்க முடியவில்லை. எனக்கு என்ன ஆயிற்று? “அம்மா! அம்மா!” மெதுவான குரலில் கூப்பிட முயற்சித்தேன். “என்னப்பா ஆச்சு? உடம்பு இப்படி கொதிக்குது.” நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். டெங்கு காய்ச்சல் நோயாளியானேன். தனி அறையில் ,யாரும் என்னுடன் இருக்க முடியாது. அன்றாடம் அம்மாவிடமிருந்து வீடியோ கால் வரும். கண்ணீர் மட்டும் தான் பேசும். நோயின் ஆதிக்கமும், பொன்னியின் குட்டிகளின் நினைவும் என்னை வாட்டியது.

“எத்தனை நாளா நான் ஆஸ்பிட்டல்ல இருந்தேன் பா?” காரில் வெகு நேரம் தொடர்ந்த மௌனத்தைக் கலைத்தேன்.

“பத்து நாட்களா ஆச்சு யா, பாவம் உங்கம்மா உன்னைப் பார்க்காம ரொம்ப கவலை பட்டாங்க.” சோர்ந்த குரலில் கூறினார் அப்பா. அம்மாவைப் பற்றி நான் கேட்காதது அப்பாவிற்கு வருத்தத்தை அளித்திருக்கும் என்பதை ஊகித்தேன்.

“முதல்ல வீட்டுக்கு போவோம், உடம்பை முதலில் பாரு ஐயா, நாளைக்கு உங்க மாமா வீட்டுக்குப் போய் குட்டிகளைக் கொண்டு வரலாம்” என்றார். உடல் பாதி குணமடைந்தது. அப்பாவுக்கு மனதிலேயே நன்றி கூறினேன்.

இருந்தாலும் வீட்டிற்கு செல்ல மறுத்தது மனம். அப்பாவிடம் கெஞ்சி கேட்கலாமா என்று நினைத்தேன். பேசக் கூட தெம்பில்லாத நிலையில் அப்பா சொல்வதை கேட்பதுதான் நல்லது என்று எண்ணி அமைதி கொண்டேன். அப்பா எனக்கு எப்பொழுதுமே பக்கபலமாக இருப்பார் என்று தெரியும். அப்பா கண்டிப்பாக அம்மாவின் செயலைக் கண்டு கோபப்பட்டிருப்பார்.

வீட்டிற்கு வந்தோம். பொன்னியில்லாமல் வீடு எப்படி இருக்குமோ தெரியவில்லை. பொன்னியின் குட்டிகளுக்காக நான் சுயமாக தயார் செய்த அட்டைப் பெட்டி வீடு வாசலிலேயே இருந்தது. தூக்கி வீசுவதற்கு கூட அதைத் தொடுவதைக்  அம்மா விரும்பமாட்டார் என்பது அறிந்ததுதான். எப்படியாவது இன்று இரவுக்குள் அப்பாவிடம் பேசி மாமா வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று மனதில் முடிவெடுத்தேன்.

வாசலில் அம்மா நிற்கிறார்.. கைகளில். ஆம் கைகளில் பொன்னியின் குட்டிகள். நாய் பக்கத்தில் வர மறுத்த என் அம்மாவின் கைகளில் நாய் குட்டிகள். “நான் உன்னைப் பிரிந்து இருக்கும் போதுதான் அந்த கஸ்டத்தை உணர்ந்தேன் ஐயா குமாரு. இதுக்கு மேல பொன்னியையும் குட்டிகளையும் பிரிக்க மாட்டேன் ஐயா” என்றார் கலங்கிய கண்களோடு என் தாய். அம்மாவைக் கட்டி அணைத்தேன்.

அம்மாவின் அணைப்பில் குட்டிகள்.

 

error: Copyrights: Content is protected !!