சிறந்த தேர்வு

சிறந்த தேர்வு

ஆக்கம் : தனேசுவரி கேசவன்

மலேசியா

டூட்.. டூட்… டூடூட்… டூடூட்.. டூடூட்… டூடூட்… டூடூட்…

நேரமாக நேரமாக அலாரம் வேகமாக ஒலிக்கத் தொடங்கியது.

“கபில்.. எழுந்திரி…” கபிலன் நகராமல் இருந்தான்.

“கபில்.. மணி ஆகிறது… எழுந்திரி…”

சோம்பலுடன் படுக்கையை விட்டு எழுந்தான். அறையின் சன்னல் திரை சுயமாகத் திறந்தது. மேகம் இன்னும் இருட்டிக் கொண்டுதான் இருந்தது. சூரியன் அப்பொழுதுதான் தனது கதிரை உலகுக்கு வீச தயார்படுத்திக் கொண்டிருந்தது.

“இது ஒன்னு! தினமும் என்னைச் சீக்கிரமா அலாரம் வெச்சி எழுப்பிவிட்டுறது!” இன்னும் கொஞ்ச நேரம் அப்படியே தூங்கலாம் என மெத்தையில் மெல்ல சாய்ந்தான் கபிலன்.

“குளியலுக்கான பொருட்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.” கபிலனின் காதில் சத்தம் விழுந்தது. ஆயினும், அவன் எழுந்திரிக்கவில்லை.

“கபில்….”

அம்மாவின் குரலைக் கேட்டுத் திடுக்கிட்டான் கபிலன்.

“ஓ… எழுந்திரிக்கலனு அம்மாவை எழுப்பிட்டியா? இரு! இன்னைக்கு உன்னோட பெட்டிரியைக் கழற்றி வீசிடுறேன்!” மின்சார உதவியுடன் வேலையைச் செய்து கொண்டிருந்த ‘கிலிஷா’ தூக்க மயக்கத்தில் திட்டினான்.

“நான் மின்சாரத்தால் நகர்கிறேன்.” ‘கிலிஷா’வின் பதிலைக் கேட்டு அப்படியே நின்றான் கபிலன். அதனைக் கண்டு ஒரு முறை முறைத்தான்.

“தாமதமாகிறது. இன்னும் ஒரு மணி நேரத்தில் வண்டி வந்துவிடும்.” என்று கூறியபடியே ‘கிலிஷா’ மெல்ல மறைந்தது. கழிவறைக்குள் நுழைந்தான் கபிலன். ‘கிலிஷா’ கூறியப்படியே எப்பொழுதும் போல பொருட்கள் தயார் நிலையில் இருந்தன. தன் முன்னே ஒரு சிறிய அறை இருந்தது. கபிலன் அதனுள் நுழைந்தான். அங்கு இருந்த நாற்காலியில் மெல்ல சாய்ந்தான்.

“சுவையைத் தெரிவு செய்யவும்” இன்று என்ன சுவை?… ஆப்பிளா? ஆரஞ்சா?

இன்று இந்த இரண்டு சுவைகள் கொண்ட பட்டன்கள் மட்டுமே இருந்தன. ஆப்பிள் பட்டனை அழுத்தினான். உடல் எங்கும் அசையவில்லை. கபிலனின் கைகளும் நகரவில்லை. ஆனால், பல் துலக்குதல் தொடங்கி குளியல் வரை அனைத்தும் ஆப்பிள் சுவையில் செய்தும் முடித்தான். கபிலனின் உடல் மேனி அனைத்தும் ஆப்பிள் பழ வாசனையை வெளிக்காட்டின.

“இன்றைய பயிற்சிக்கு தேவையான உடைகள் தயார் செய்யப்பட்டு விட்டன.”

குரல் வந்ததும் இயந்திரம் தானாகக் குளியலை நிறைவு செய்தது. சாய்ந்திருந்த கபிலன் அப்படியே நாற்காலியிலிருந்து எழுந்தான். அறையிலிருந்து வெளியே வந்தான். ஆடைகள் வாசலில் தயாராக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. தன் முன்னே இருந்த ஆடையை அணிந்தான். அறையில் வேலை முடிந்ததும், நேராக சமையலைறைக்குள் நுழைந்தான்.

“காலையுணவைத் தெரிவு செய்யவும்.” என்றும் போல ஒவ்வொரு உணவிற்கும் இரண்டு பட்டன்கள் கண்முன்னே இருந்தன.

“பேன்கேக் 2” “ஆப்பிள் பழம் 1” “ஜெல்லி 1” “ஆரஞ்சு ஜூஸ் 1” தெரிவு செய்த இரண்டு நிமிடங்களில் மேசையில் உணவுகள் தயாராக இருந்தன. கபிலன் காலையுணவை உண்ன தொடங்கினான்.

“கிலிஷா, இன்றைய திட்டம் என்ன?” என்று கபிலன் கேட்டான்.

“கபில், இன்னும் இருபது நிமிடங்களில் வண்டி வந்துவிடும். நேராகப் பயிற்சி மையத்திற்குச் செல்வீர்கள். மாலை மூன்று மணிக்கு பயிற்சி முடியும். அடுத்து, மையத்திற்குச் செல்வீர்கள். இன்று உங்கள் வண்டி 7.40க்கு, உங்களை நூலகத்திலிருந்து அழைக்க வந்துவிடும். இரவு எட்டு மணிக்கு வீட்டிற்கு வருவீர்கள்.”

“ஏன் மையத்திற்கு செல்ல வேண்டும்? ஏதும் தகவல்கள் உண்டா?”

“எங்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவல் – அனைத்து பயிற்சி மாணவர்களும் பயிற்சியை முடித்துவிட்டு மையத்திற்கு வரவேண்டும் என்பதே! மறவாமல் ஆயுதத்துடன் வரும்படி கூறியுள்ளனர்.”

“ஓகே! கிலிஷா… ஸ்கிரீன் அப்டேட் ஆச்சா?”

“ஆச்சு கபில்.”

“அப்படியென்றால், கிலிஷா ஓப்.. மெகா ஓன்…”

அறையை சுற்றி கட்டளையிட்ட கிலிஷாவின் சத்தம் அடங்கியது. கபிலனின் கையில் இருந்த கடிக்காரம் ஒலிக்கத் தொடங்கியது.

தனது ஆயுதமான கூர்வாளையும் எடுத்தான். அதனைப் பாதுகாப்பாக உறையில் வைத்தான். வீட்டு வாசலுக்கு வந்ததும் சரியாக அவனது வண்டியும் வந்தது. வண்டியில் முன்னதாகவே ‘கிலிஷா’ பாதையைக் குறித்து வைத்திருந்தது. அதனால், நேராகக் கபிலன் பயிற்சி மையத்திற்குச் சென்றான். அன்றைக்கான பயிற்சிகள் யாவும் சிறப்பாக முடிந்தன.

மதிய உணவு முடித்தான் கபிலன். அடுத்து, கபிலனின் வண்டி மையத்திற்கு அழைத்துச் சென்றது. அங்கு தன்னைப் போன்று மற்ற நண்பர்களும் கூடியிருந்தனர்.

கூடியிருந்தவர் அங்கும் இங்கும் கிடைக்கப்பெற்ற தகவல்களை வைத்துக் கூட்டத்தின் நோக்கத்தை அறிந்து கொண்டனர். கபிலனின் நண்பன் சாமூவேல் இதனைப் பற்றி கூறினான். “சாமூவேல், இந்தத் தகவல் எங்கிருந்து உனக்குக் கிடைத்தது?”

“அதுவா கபில்… இங்குக் கூடியிருந்தவர்கள் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டேன். அதான், உன்னிடமும் கூறினேன்.”

“சாமூவேல், உண்மையில்லாத உறுதியற்றத் தகவல்களை இப்படி பகிராதே! அது என்றும் நல்லதல்ல என்பது உனக்குத் தெரியும்தானே?”

“மன்னித்து விடு கபில். இனி இதுபோன்று செய்யமாட்டேன்.”

இப்படி பேசிக்கொண்டிருக்கையில், திடீரென்று ஒரு சத்தம்.

“அனைவருக்கும் வணக்கம். உங்களுக்கான திடீர் தேர்வு இப்பொழுது நடைபெறவுள்ளது. ஆகையால், வகுப்பு ரீதியாகக் குழுவில் நிறகவும்” என்ற அறிவிப்பு மையம் முழுவதும் ஒலித்தது. எவ்வித சலசலப்பின்றி அனைவரும் தங்களின் வகுப்பிற்கு ஏற்ப வரிசையில் நிற்கத் தொடங்கினர்.

அனைவரும் வரிசையில் நின்றனர். அப்பொழுது, தரையிலிருந்த சிறு கதவு திறந்தது. அதிலிருந்து ஒரு சிறிய இயந்திரம் பறந்து வெளியே வந்தது. வரிசையில் நின்றுகொண்டிருந்த அனைவரையும் ஒன்றின்பின் ஒன்றாகப் படியெடுத்தது. சில நிமிடங்களிலேயே, அணிந்திருந்த சட்டையின் நிறம் மாறத் தொடங்கியது. கபிலன் வகுப்பு நீல நிற சட்டை வெள்ளை கோடுகளுடன் காட்சியளித்தது. இவர்களைப் போன்று மற்றவர்களின் சட்டைகளும் மாறத் தொடங்கின. பச்சை, சிவப்பு, மஞ்சள், கருப்பு, வெள்ளை, ஊதா என அனைத்து வர்ணங்களிலும் அனைவரும் அழகாகக் காட்சியளித்தனர்.

தன் வேலை முடிந்ததும் இயந்திரம் மீண்டும் பறந்து கதவிற்குள்ளேயே சென்றது. கையில் மாட்டியிருந்த கடிகாரம் ஒலிக்கத் தொடங்கியது. திரையில் அடுத்துச் செல்ல வேண்டிய இடத்தைக் காட்டியது. கபிலன் தன் குழுவுடன் அந்த இடத்தை நோக்கி நடந்தான்.

அறை இருண்டு கிடந்தது. இவர்கள் உள்ளே நுழைந்ததும் அறையின் விளக்கு எரியத் தொடங்கியது. அவர்களின் முன்னே கணினிகள் அடுக்கப்பட்டிருந்தன. மெதுவாகக் கணினியின் அருகே சென்றனர். அப்பொழுது, கணிணி திரையில் எழுத்துகள் தெரிந்தன.

பத்து… ஒன்பது… எட்டு… ஏழு… ஆறு… ஐந்து.. நான்கு.. மூன்று.. இரண்டு.. ஒன்று…

இடுபணி தொடங்க நேரம் நெருங்கி கொண்டிருந்தது.

“வீரர்களே! நீங்கள் செல்ல வேண்டிய அறையில் சில சக்திகள் உள்ளன. சுங்களில் ஒருவர் மட்டுமே பூமிக்குச் செல்ல போகிறீர்கள்! நீங்கள் அனைவரும் சரியான சக்தியைத் தெரிவு செய்ய வேண்டும். ஒரு சக்தி மூன்று முறை மட்டுமே பயன்படுத்தப்படும். நீங்கள் தெரிவு செய்த சக்திக்கு ஏற்ற காரணத்தையும் கூற வேண்டும். அப்படி உங்களின் காரணங்கள் தவறாக இருந்தால், நீங்கள் இந்தப் பயிற்சியிலிருந்து நீக்கப்படுவீர்கள். இந்த சக்திகளில் சிறந்த ஒரு சக்தியைக் கொண்ட ஒருவர் மட்டுமே பூமிக்குள் நுழைய முடியும். பூமியையும் காப்பாற்ற முடியும்.”

ஒலித்துக் கொண்டிருந்த பெண்ணின் குரல் அந்த அறையை விட்டுக் காணாமல் போனது. தரையிலிருந்து ஐந்து வர்ணங்களில் சக்திகள் வெளிவந்தன. அவை நீர், நெருப்பு, காற்று, பூமி, வானம் என பஞ்சப்பூதங்கள் சக்திகள் ஆகும். உடனே, கபிலனின் குழு சக்திக்காகப் போராடத் தொடங்கின. அனைவரும் போட்டிப் போட்டுக் கொண்டு தங்களின் சக்தியைப் பெற முயற்சி செய்தனர்.

அனைவரும் தங்களுக்குத் தேவையான சக்தியையும் அதன் காரணத்தையும் முன்வைத்தனர். ஒவ்வொரு முறையும் ஒரு கதவு இவர்களை உள்ளிழுத்துக் கொண்டது. ஆனால், யாரும் தேர்வில் வெற்றி மட்டும் பெறவில்லை.

இன்னும் கபிலனுடன் சேர்ந்து மீதம் இருப்பவர்கள் அறுவர் மட்டுமே. அதில் ஐவரும் ஆளுக்கு ஒரு சக்தியை எடுத்துக் கொண்டனர். கபிலனுக்கு மட்டும் சக்திகள் ஏதும் கிடைக்கவில்லை. தனது குழுவினர்கள் இச்சக்திகளைப் பயன்படுத்திவிட்டால், இனிமேல் மீண்டும் பயன்படுத்த முடியாது. கபிலன் கவலையிலும் தேர்வில் தோற்றுவிட்டதை எண்ணியும் வருத்தமடைந்தான்.  இனி தன் குடும்பத்தை எப்பொழுது பார்க்க முடியும் என இன்னும் வருத்தம் அடைந்தான்.

தனது குழுவினர் அனைவரும் சக்தியைப் பயன்படுத்தினர். அவர்களும் அப்படியே காணாமல் சென்றனர். கபிலன் சக்தி ஏதும் இன்றி கதவின் முன் நின்றான்.

“பூமியை அழிவிலிருந்து காப்பாற்ற எனக்கு இங்குள்ள எந்தச் சக்திகளும் தேவையில்லை. இத்துணை சக்திகள் இருந்தும் மனிதர்கள் பூமியைக் காப்பாற்ற தவறிவிட்டனர். இந்த வலிமையான சக்திகளுக்குப் பதிலாக, இங்குப் வளர்ந்திருக்கும் செடியை மட்டும் நான் கொண்டு செல்கிறேன்” என்றான் கபிலன். கதவின் ஓரத்தில் வளர்ந்திருந்த செடியை அழகாக எடுத்தான். அதனைப் பூமியில் நட்டுக் காப்பாற்ற கதவை நோக்கி நடந்தான். கபிலனின் நீல நிற வெள்ளைக் கோடு சட்டை ‘சூப்பர்ஹீரோ’ சட்டையாக மாறிக் கொண்டிருந்தது. கபிலனின் பூமிக்கான பயணம் அப்பொழுது தொடங்கியது.

 

 

error: Copyrights: Content is protected !!