முடிவு

முடிவு

ஆக்கம் : ரூபிணி த/பெ அசோகன்

மலேசியா

“அனைவருக்கும் இன்றைய பாடம் நன்றாகப் புரிஞ்சதா?,” புதிதாக மாற்றலாகி வந்த கணித ஆசிரியர் சரவணன் மாணவர்களைக் கேட்டார். அவரின் வகுப்பு முடிய இன்னும் ஐந்து நிமிடங்களே எஞ்சியிருந்தது. இன்றுதான் ஆண்டு ஐந்து ரோஜாவின் முதல் கணித வகுப்பு என்றாலும் மாணவர்கள் கொடுத்த ஒத்துழைப்பு அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அனைத்து மாணவர்களும் ஆர்வமாக பதில் சொல்ல வகுப்பின் மூலையின் தன் மேசை மீது ஒரு மாணவன் தலைசாய்த்துத் தூங்கிக்கொண்டிருந்தான். சரவணன் அவன் அருகில் சென்று,

தம்பி! உடம்பு சரியில்லையா என்ன? புத்தகத்தைத் திறந்து வெச்சிட்டு தூங்கிட்டு இருக்க? என்ன ஆச்சு உனக்கு?,” அவன் தலையில் கைவைத்தவாறு பரிவாகக் கேட்டார். அவன் பதில் கூறுவதற்குள், அவ்வகுப்பின் சிறந்த மாணவனாக திகழும் கார்த்திக்,

“சார், அவன் கலைக்குமார். எல்லாரும் ‘கலை’ன்னுதான் கூப்பிடுவோம். அவன் எப்போதும் இப்படித்தான். ‘க்லாஸ்ல’ தூங்கிட்டுத்தான் இருப்பான்; ‘எக்சம்ல’ அவன் தான் கடைசியா வருவான். எல்லா டீச்சரும் ஏசுவாங்க; நாங்க யாரும் அவன்கிட்ட பேசமாட்டோம். கலையைப் பற்றி சரவணன் ஆசிரியரிடம் சொன்னதில் உள்ளூர அவனுக்கு ஒரு ஆனந்தம். கலையைப் பார்த்து நமட்டுச் சிரிப்பை உதிர்த்தான். சரவணன் தலையசைத்தவாறே வகுப்பிலிருந்து வெளியே செல்ல கலை மீண்டும் மேசையின் மீது படுத்தான்.

……….

மதிய நேரம் இரவு போல காட்சியளித்தது. கருமேகங்கள் ஒன்று சூழ மின்னலும் இடியும் மாறி மாறி வானத்தை வெளிச்சத்திலும் ஒலியிலும் அலங்கரித்தன. சற்றுநேரத்தில் மேகங்கள் மழையைக் கொட்டி பூமியை சிலிர்க்க வைத்தன. இயற்கை விரும்பிகளுக்கு இந்த காட்சி மனத்திற்கும் கண்ணிற்கும் நல்ல உணவாக அமையும். பெற்றோர்கள் தன் பிள்ளைகள் மழையில் நனைந்துவிடக் கூடாதென்று பத்திரமாக குடையுடன் அழைத்துச் சென்றனர். கலையுடன் சில மாணவர்களும் பள்ளிக்கூட வளாகத்தில் பெற்றோர்களுக்காகக் காத்திருந்தனர். கார்த்திக்கின் அப்பா, முழுதாக நனைந்து மழை நீர் சொட்ட சொட்ட மோட்டார் வண்டியிலிருந்து இறங்கினார்.

“ என்ன கார்த்திக்..மழை இப்படி பெய்யுது. அப்பாக்கு வேலைக்கு வேற மணியாச்சு. இன்னிக்கு ‘பாஸ்கிட்ட’ ‘ரிப்போர்ட்’ ஒன்னு கொடுக்கணும்; லேட்டா போனா ஏசுவாரு,” நனைந்திருந்த சட்டையைப் பிழிந்தவாறே தன் மகனிடம் ஆதங்கத்தைக் கொட்டினார் சந்திரன். இதைக் கேட்டுக்கொண்டிருந்த கலை,

“ அங்கள், எங்கிட்ட குடை இருக்கு. நீங்க முதல்ல வீட்டுக்கு போங்க; நான் நடந்துதான் போவேன். மழை நின்டதும் போய்கிறேன்; அவசரம் இல்லை,” புத்தகப்பையில் இருந்து குடையை எடுத்து நீட்டினான்.

தம்பி..நீயும் வரியா? வீட்டுல விட்டுட்றேன்?,” சந்திரன்.

“பரவாயில்லை அங்கள். மோட்டார் வண்டியில எப்படி மூனு பேரு போறது? நீங்க ரெண்டு பேரும் போங்க,” கலை.

கலையின் செயலைக் கண்டு நெகிழ்ந்த மனத்துடன் குடையை வாங்கினார் சந்திரன். அப்பா குடையை வாங்கும்போது கார்த்திக்கு கடந்த வாரம் வகுப்பில் அவன் கலையைப் பற்றி சரவணன் ஆசிரியரிடம் சொன்னது கண் முன் நிழலாடியது. மோட்டார் வண்டியில் ஏறியவுடன் திரும்பிப் பார்த்தான் கார்த்திக். கலை புன்னகைத்தவாறே அவர்களைப் பார்த்துக் கையாட்டிக் கொண்டிருந்தான். கார்த்திக்கின் வீடும் கலையின் வீடும் ஒரே வரிசைதான். இருவருடைய வீடுகளுக்கும் இடையே மூன்று வீடுகள்தான். ஆனால், கலை வகுப்பில் பின்தங்கிய மாணவன் என்பதால் கார்த்திக் அவனிடம் பேசவோ விளையாடவோ மாட்டான்.

மணி மூன்றை எட்டியது. மழை இன்னும் விட்டப்பாடில்லை. அந்த பள்ளி வளாகத்தில் கலை மட்டும் மழை நிற்குமென எதிர்பார்த்து உட்கார்ந்திருந்தான். சரவணன் ஆசிரியர் தன் மகிழுந்தில் வெளியேறும்போது, கலை மட்டும் தனியே அமர்ந்திருப்பதைக் கண்டு அவனை அழைத்தார்.

“சொல்லுங்க சார்! ‘’கண்ணாடி வழியே கேட்டான் கலை.

“மழை பெய்யுது..உள்ளே வா சீக்கிரம்,” சட்டென்று காரின் உள்ளே ஏறினான் கலை.

“என்னாச்சு சார் ? ஏன் கூப்பிட்டிங்க ?,” கலை.

“ஒன்னுமில்லை..நீ மட்டும் இன்னும் வீட்டுக்குப் போகாம இருக்க. மழையும் நிக்காம பெய்யுது. உன் வீடு எங்க இருக்குன்னு சொல்லு விட்டுட்றேன்,” சரவணன்.

“ரொம்ப நன்றி சார் உங்க உதவிக்கு,” இதுவரையிலும் இப்படி ஒரு சொகுசு காரில் ஏறாதவன் அதை தாஜ்மஹால் போல சுற்றி சுற்றிப் பார்த்தான். கலையின் குழந்தைத் தனமான செயல் சரவணனின் மனதை ஆட்கொண்டது.

“ஐயா..நான் உங்கிட்ட ஒன்னு கேட்கணும்,” மகிழுந்தை செலுத்திக்கொண்டே கலையுடன் பேச்சைத் தொடங்கினார்.

“சார்?” தன் ஆசிரியர் என்ன கேட்கப்போகிறாரோ என்று அவன் மனம் பதபதைத்தது.

“நீ பாக்க ரொம்ப நல்ல பையனாத் தெரியுறா. யார் வம்பு தும்புக்கும் போக மாட்ற. வகுப்புல அமைதியாவே இருக்க. நீ சேட்டைப் பன்ற பையன்னும் யாரும் சொல்லமாட்டாங்க. என்னால உன்னைப் புரிஞ்சிக்க முடியல. உனக்கு என்னாச்சும் பிரச்சனையா? என்னை உன் நண்பன் போல நினைச்சுக்கோ. என்னவா இருந்தாலும் சொல்லு,” ஒரு கை கார் ‘ஸ்டீயரிங்கில்’ இருக்க மற்றொரு கை கலையின் தலையை அன்பாக வருடிக்கொண்டிருந்தது.

……….

“என்ன கறி இது? நல்லாவே இல்ல. இதான் நீ சமைக்குற இலட்சணமா?”, தட்டில் இருந்த சாம்பார் கலந்த சோற்றுப்பருக்கைகள் அந்த வீட்டின் சுவர்களில் தெரித்து, தட்டு சிதறி தரையில் விழுந்தது. மீனா வழக்கம்போல சிதறிய சோற்றை சுத்தப்படுத்த பழையத் துணியை எடுத்து வந்தாள். அவள் முகத்தில் எந்தவொரு பயமும் சலனமும் இல்லை.

“ உனக்கு என்ன அவ்வளோ திமிரு ?,” மீனாவின் கன்னத்தில் பளாரென ஓர் அறை விழுந்தது. கலையின் கையை அவனது ஐந்து வயது தங்கை இருக்கமாகப் பிடித்துக்கொண்டிருந்தாள். அவள் உடல் பயத்தில் நடுங்கியது.

“என்ன பார்வை? உள்ள போறிங்களா? இல்ல உங்களுக்கும் ரெண்டு வைக்கணுமா?,” அப்பாவின் அதட்டல் கோபமாக மாறுவதற்குள் கலை தன் தங்கையை இழுத்துக்கொண்டு அறைக்குள் சென்றான். மருதன் தினமும் குடித்துவிட்டு மனைவியை அடிப்பதும்; பணத்தைத் திருடி சிகரெட், மதுபானம் போன்றவற்றை வாங்குவதும் இந்த குடும்பத்திற்கு ஒன்னும் புதிதல்ல. வாடிக்கையாக அரங்கேறும் நிகழ்வானாலும் அந்த இரு பிஞ்சு மனத்தை எப்போதும் ஒரு வித பயம் நெருக்கிக்கொண்டே இருந்தது.  பிள்ளைகளுக்கு முத்தம் கொடுத்து ‘குட் நைட்’ சொல்லி உறங்க வைக்கும் பெற்றோர்களுக்கு மத்தியில் அப்பாவின் அடி உதைகளை வாங்கிவிட்டு பரிதாபமாக உறங்கும் அம்மாவிற்கு கைகால்களை தைலம் ஊற்றி தேய்த்து விடுவது கலையின் அன்றாட நடவடிக்கைகளில் ஒன்று.

……….

கலையின் கண்களில் நீர்த்துளிகள் வழிந்ததைக் கண்ட சரவணன் தன் கைக்குட்டையை அவனிடம் நீட்டினார். தன் ஆசிரியரைப் பார்த்தவாறே கைக்குட்டையை வாங்கி தன் முகத்தைத் துடைத்தான் கலை. அவன் வீட்டிற்கு செல்லும் வளைவில் தன் மகிழுந்தை ஓரமாக நிறுத்தினார் சரவணன்.

“கலை..நான் உங்கிட்ட ஒன்னு சொல்லுறேன். கேட்பியா? என்னை நீ தப்பா எல்லாம் நினைச்சிக்காத. உன் குடும்பம் நல்லா இருக்கணும்னுதான் நான் இதை சொல்றேன். நீ என்னோட மாணவன்; உன் எதிர்காலம் நல்லா இருக்கணும். அதான் என் ஆசை,” தன் இருக்கையில் சாய்ந்தவாறு பேசினார் சரவணன்.

“சார்..இதுவரைக்கும் யாரும் எங்கிட்ட இவ்வளோ அன்பா பேசினது இல்லை. நீங்க என்ன சொன்னாலும் நான் செய்றேன் சார்,” சரவணன் ஒரு நீண்டப் பெருமூச்சை இழுத்து விட்டார்.

“போலீஸ் கிட்ட போலாமா? ‘’, கலை கண்கள் பிதுங்கியவாறு தன் ஆசிரியரைப் பார்த்தான். சின்னஞ்சிறு மனத்தின் அறியாமையை உணர்ந்தவர் மீண்டும் தொடர்ந்தார். “கலை, இது உன் அப்பாவைத் திருத்துவதற்கான ஒரு முயற்சிதான். ‘நிழலின் அருமை வெயிலில் தெரியும்’ கேள்விப்பட்டிருக்கத்தானே? நீங்க யாரும் கூட இல்லாம தனியா இருந்தாத்தான் குடும்பத்தோட அருமை தெரியும்; செஞ்சத் தப்பையும் உணர வாய்ப்பிருக்கு. உன் அம்மாவை அடிச்சு துன்புறுத்த மாட்டாரு; குடிப்பழக்கத்தையும் விட்டுருவாரு. இப்ப முடிவு உன் கையிலதான் இருக்கு. இது உன் வாழ்க்கை; உன் குடும்பம். என்னால உனக்கு ஒரு வழி தான் காட்ட முடியும். முடிவு நீ தான் எடுக்கணும். இங்கத்தான் உன்னோட புத்திசாலித்தனத்தை காட்டுவதற்கு ஒரு வாய்ப்பு அமைஞ்சிருக்கு. நல்லா யோசி கலை. வளைஞ்சு போனா உன் வீடு; திரும்ப அதே இருட்டு. நல்ல முடிவு எடுத்தா நான் காரைத் திருப்புறேன்; உன் வாழ்க்கைக்கு ஒரு வெளிச்சம் கிடைக்கும். என்ன நடந்தாலும் நான் உனக்கு உதவியா இருப்பேன். இனிமே எல்லாம் நீ எடுக்குற முடிவுல தான் இருக்கு,” பின் இருக்கையில் இருந்த நீர்ப்புட்டியை எடுத்து நீர் அருந்திக்கொண்டே கலையை உற்று நோக்கினார் சரவணன்.

கலையின் முடிவு??

……….

“ இந்த வீடு தானே? மதியத்திலேயே உன் அப்பா ஆரம்பிச்சுட்டாரு போல! ‘’ கலையிடம் சொல்லிக்கொண்டே அவன் வீட்டினுள் நுழைய தன் இரு உதவி காவலர்களுடன் ஆயத்தமானார் அதிகாரி மூர்த்தி.

“என்னடா! இப்பயே குடிச்சிட்டு மனைவியை அடிக்க ஆரம்பிச்சிட்டியா? உன்னை எல்லாம்…”, மருதனின் சட்டையைப் பின்னாலிருந்து இழுத்து திருப்பிய மூர்த்தி ஒரு கணம் அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்றார்.

மருதன் மேலிருந்த கையை இறக்கி, “டேய், எப்படி இருக்க? எங்கத்தான் போன? கடைசியா உன்னை கல்யாணத்துல பார்த்தது. உன் பையன் வந்து ‘கம்லைன்’ கொடுக்குற அளவுக்கு நீ என்னதான் பண்ணிக்கிட்டு இருக்கன்னு உனக்கு தெரியுதா? எங்கருந்து வந்துச்சு இந்த சிகரெட்டும் குடிப்பழக்கமும்? இதுனால உன் குடும்பமே நிம்மதியில்லாம இருக்கு. “தங்கச்சி, நீ கவலைப்படாத மா..இவன நான் திருத்தி புது மனுஷனா உன் கையில ஒப்படைக்கி…,” வார்த்தைகள் தடுமாற மீனாவையே ஒரு கணம் பார்த்துக்கொண்டிருந்தார் மூர்த்தி. “நீங்க யாரு?,” என்ற அவரின் ஒற்றை கேள்வி அங்கிருந்தவர்களை பல கேள்விகளுக்கு உள்ளாக்கியது.

 

 

error: Copyrights: Content is protected !!