ஆசை

ஆசை

ஆக்கம்: விக்கினேசுவரன் த/பெ பார்த்திபன்

மலேசியா

அப்போவே நான் படிச்சு படிச்சு சொன்னேன். யாரு என் பேச்ச கேட்டா? இப்போ எனக்கு தான் எல்லா தல வலியும். இதெல்லாம் எனக்குத் தேவ தான். நான் இப்போ என்ன பண்ண போறேன் தெரிலையே. இறைவாகாப்பாத்து!”

ஒரு கையில் தொட்டிலை ஆட்டிக்கொண்டு விழிகளில் கண்ணீர் வழிந்தோட காட்சியளித்த அம்மாவைப் பார்ப்பதற்குச் சற்றும் மனம் இடம் கொடுக்கவில்லை. தொட்டிலின் வேகமும் வழக்கத்தை விட இன்று கூடுதலாகவே காணப்பட்டது. அது பதற்றத்தில் ஏற்பட்ட வேகமா அல்லது அம்மாவின் கோபத்தின் உச்சியில் தானாக வெளியேறிய அதிவேகமா எனச் சரியாக அனுமானம் கூட செய்ய இயலவில்லை. தொட்டிலில் ஆழ்ந்த உறக்கத்தில் திளைத்திருந்த பாப்பா தொட்டிலின் திடீர் வேகத்தால் திடுக்கிட்டு எழுந்து விம்மி அழ துவங்கினாள்.  அம்மாவை அப்பொழுது எப்படியாவது சமாதானப்படுத்தவே மனம் அலைமோதியது. இருந்தும், அம்மாவின் அருகில் சென்றால், அவர் இப்பொழுது இருக்கின்ற கோபத்தில் தன் கை சின்னத்தை என் பிஞ்சு கண்ணத்தில் பதிய வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இறுதியாகப் பாட்டி ஆசையாய் வாங்கிக் கொடுத்த கண்ணாடி குவளையைத் தெரிந்தே உடைத்த போது வாங்கிய எதிர்ப்பாரா அரை. இன்றும் நினைவில் நீங்கா இடம்பிடித்திருந்தது. அந்த அரைக்குப் பயந்தே நான் பாட்டி கட்டியிருந்த வெளுத்துப் போன கைலியின் பின் சென்று மறைந்து நின்று கொண்டேன். பாட்டி உருவம் என்னை முழுமையாக மறைக்கும் அளவிற்குத் தற்காலிகப் பாதுகாப்பைக் கொடுத்திருந்தது. அம்மாவின் கோபத்திற்கும் பல பொருள் பொதிந்த புலம்பல்களுக்கும் எவராலும் அத்தருணத்தில் சமாதானமும் சொல்லிவிட இயலாமல் பல சிந்தனைகளில் நின்றிந்தனர்.

***************************

எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் நாங்கள் பாரிட் கம்பத்திற்கு எப்போது வந்தாலும் அம்மா இப்படி முழுமையாகத் தன் இயல்பு குணத்தை விட்டு விலகி நிற்பது வழக்கமாகிப்போனது. தலைநகரில் இம்பியான் அடுக்குமாடியில் உள்ள அன்பு, பொறுமை, பரிவு என மிகுதியாகக் கண்ட எதுவும் பாரிட் கம்பத்தில் துளியும் அம்மாவிடம் காண இயலாது. அது அம்மாவின் தவறாகவும் நாங்கள் என்றும் எண்ணியதுமில்லை. அம்மாவைப் பொறுத்தவரையிலும் பாரிட் கம்போங் எங்களுக்குத் தேவையில்லா ஓர் இடமாகவே மனத்தில் தீர்மானித்து வைத்திருந்தார். ஆனால், எனக்கும் தம்பிக்கும் அப்படியல்ல. பாரிட் கம்போங் மட்டுமே மனிதர்கள் வாழ கூடிய சொர்க பூமியாக மனத்தில் ஒட்டிக் கொண்டது. பாரிட் கப்போங் என்றாலே முதலில் நினைவிற்கு வருவது பாட்டியின் புன்னகைத்த முகம் தான். நாங்கள் என்ன குறும்புத்தனம் செய்தாலும் சூப்பர் ஹீரோவாக நின்று காப்பாற்றியப் பின்னரே மறு வேலை பார்ப்பார். அதோடு பாட்டியின் தனி கை பக்குவத்தில் உருவாகும் பாசி பருப்பு பாயாசத்திற்கு நானும் தம்பியும் நிரத்தர அடிமையாகியிருந்தோம். பாடான் இலைகள், முந்திரிப் பருப்பு எனச் சேர்த்து உருவாக்கப்படும் பாயாசம் பாரிட் கம்பத்தையே மணக்கச் செய்யும்.  ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே சுவைக்க முடிந்த அந்தப் பாயாசத்திற்குத் தடை விதித்தால் எப்படி எங்களின் மனம் ஏற்கும்.

எட்டாவது மாடியிலிருந்து ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தால் தலைநகரே கண் முன் சிறியதாகக் காட்சிக் கொடுக்கும். சில சமயங்களில் அக்கட்டிடங்களை நானும் தம்பியும் கைகளில் எடுத்து விளையாடுவது வழக்கம். விளையாட்டின் இறுதியில் கட்டிடங்களைச் சேதப்படுத்துவதே எங்களுக்கு எப்போதும் பேரானந்தத்தைக் கொடுக்கும். கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் பச்சை பசேல் என்று ஒன்றும் காணமுடியாத அவ்விடம் எங்களுக்கு சலிப்பையே ஒவ்வொரு முறையும் பரிசளிக்கும். ஆனால், பாரிட் கப்போங் அப்படியல்ல கட்டிடங்களைக் காண்பதற்குப் பல கீலோ மீட்டர் சென்றாக வேண்டும். இயற்கையின் வரப்பிரசாதமாய் தோன்றியிருக்கும் அவ்விடத்தைக் காண ஒரு வாரம் நிச்சயம் எங்களுக்குப் போதாது என்பதை அப்பா மட்டுமே நன்கு அறிந்திருந்தார்.

அமுதா, இந்தா கொஞ்சமாதான் பசார்ல சாயூர் வாங்கிட்டு வந்தேன். நாளைக்கு அம்மா வீட்டுக்குப் போறோம்ல இது இப்போதைக்குப் போதும். பையன்களுக்கு வாங்குன விளையாட்டு ஜாமானும் பையில இருக்கு. கொடுத்திரு.” களைத்துப் போன குரலில் அப்பா சோபாவில் பெருமூச்சு விட்டு அமர்ந்தார்.

நீங்க முடிவே பண்ணிட்டீங்களா? எதுக்கு இப்போ அங்க? வீணா எனக்கு உங்க அம்மாகூட வாய்ச்சண்டை தான் வரும். இந்த ஸ்கூல் லீவுவாவது நம்ப வீட்டுல நிம்மதியா இருக்கலாம்னு பாத்தா…” சலித்துக் கொண்டு பேசிய அம்மாவை அப்பா திரும்பியும் பார்க்கவில்லை.

பையனுங்க கிட்ட போன மாசமே ஜன்ஜி பண்ணிட்டேன். அவங்கள ஏமாத்த முடியாது. போய்ட்டு வந்துருவோம். ஒரு இரண்டு நாளுல இங்க திருப்பி வந்துரலாம். என்ன சரியா?”

என்னமோ பண்ணுங்க.” அப்பா இரண்டு நாள்களில் திரும்பிவிடலாம் எனும் சொல்லே அவ்வேளைவில் அம்மாவை சற்று பொறுமையுடன் அவ்விடத்தை விட்டு நகர மனம் கொடுத்தது. எங்களுக்குக் கொடுக்கும் சத்தியத்தை அப்பா ஒரு போதும் மீறியதில்லை. தாமதம் ஆனாலும் நிச்சயம் நிறைவேற்றிவிடுவார்.

அம்மா சமையல் வேலைகளில் மும்முரமாய் ஈடுபட்டிருந்த போது அப்பா வாங்கி வந்த விளையாட்டுப் பொருள்களைப் பையிலிருந்து எடுத்தேன். அந்தச் சூப்பர் மார்கேட் பை எழுப்பிய கய முய சப்தத்தைக் கேட்டு தம்பியும் ஓடி வந்துவிட்டான். நீண்ட நாள்களாகக் நான் கேட்டு கொண்டிருந்த அயன் மேன் ரோபோட்டும் தம்பிக்கு விருப்பமான பந்தும் அதில் இருந்தது. அவ்விளையாட்டு பொருள்கள் எங்களுக்குள் புத்துணர்ச்சியைக் கிளப்பியது. பச்சை நிறத்தில் மெசி ஸ்டிக்கரோடு அழகாகக் காட்சியளித்த அந்தப் பந்து மீண்டும் பாட்டியின் வீட்டையே எங்களுக்கு நினைவுப்படுத்தியது. விளையாட்டு பொருள்களை எடுத்துக் கொண்டு வரவேற்பு அறையில் சென்று விளையாட தொடங்கியிருந்தோம். தம்பியின் அதீத உற்சாகத்தில் உதைத்த பந்து தொலைக்காட்சியை ஒரு முறை முத்தமிட்டு சமையல் அறையில் உள்ள அம்மாவை நோக்கி துள்ளிச் சென்றது. பாலை குடித்து நீண்ட நேரம் உறங்கிக் கொண்டிருந்தப் பாப்பாவும் கண்விழித்து அழுகையோடு அம்மாவைத் தேட தொடங்கினாள். பாப்பா தொட்டியிலிருந்து விழுந்து விட்டால் என எண்ணி பதறியடித்து சமையறையிலிருந்து வந்த அம்மா வாங்கி வந்த பந்திற்கு அப்போதே தடை விதித்தவளாய் ஸ்டோரில் கொண்டு போய் போட்டாள். அப்பந்திற்கு ஏற்பட்ட சாபம் அது. தம்பியால் ஒரு முறை மட்டுமே உதைக்க வாய்த்திருந்தது. அவ்வீட்டில் எப்படி பந்தை உதைத்தாலும் எங்கேயாவது பட்டு இவ்வாறு நடக்கும் என அறிந்தே பந்தின் மீதான ஆசையே இல்லாமலிருந்தேன். தம்பி கவலையாக நாற்காலி அடியில் சென்று அமர்ந்திருந்தான். நான் கையில் வைத்திருந்த அயன் மேன் ரோபோட்டைக் கொடுத்து சமாதானப்படுத்த முயற்சித்தேன். நாளை பாட்டி வீட்டிற்குச் சென்று விருப்பத்திற்கேற்ப விளையாடாலாம் என ஊக்கமான வார்த்தைகளைப் பேசி தம்பியை இயல்பு நிலைக்குக் கொண்டு வந்தேன்.

இரவில் பாட்டி வீட்டின் கற்பனையிலேயே உறங்கி காலையில் விழித்தேன். அம்மா தம்பிக்குப் புதிய கால்சட்டை அணிந்துக் கொண்டிருந்தார். குமரா, போய்க் குளி. நீ மட்டும் தான் இன்னும் கிளம்புல. போ சீக்கிரம்.” பாட்டியின் வீட்டுக்குச் செல்ல போகிறேன் என்ற அளவில்லா ஆனந்தத்தில் குளித்துச் சில நிமிடங்களில் தயாராகி விட்டேன். தம்பி எனக்கு முன்னே வாகனத்தில் சென்று அமர்ந்துவிட்டான். பாட்டியின் வீட்டை அடையும் தருணத்தை எண்ணி நானும் தம்பியும் காத்துக் கொண்டிருந்தோம். பயணத்தில் அம்மா பல முறை உறங்கச் சொல்லியும் மனம் உறங்க இயலாமல் ஆர்வத்தில் திளைத்திருந்தது. இன்னும் எவ்வளவு நேரம் பா?” அப்பாவிடம் பல முறை கேட்டு அப்பாவே பதில் கூற சலித்துப் போயிருப்பார். சில மணி நேரங்களில் கண்களுக்குக் கட்டிடங்கள் யாவும் மறைந்துப் போயின. பாட்டியின் வீட்டை அடையப்போகிறோம் என நன்கு ஊகித்துக் கொண்டோம். பார்க்கும் திசையெல்லாம் வயல் வெளிகளும், குளங்களும் படர்ந்துக் காணப்பட்டன. விசாலமான திடலில் இளைஞர்கள் மேல் சட்டையின்றி காற்பந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்பா தொலைக்காட்சியில் காணும் காற்பந்தை நாங்கள் நேரில் காண ஒரு நொடி வாய்ப்புக் கிடைத்தது. ஓராண்டு கழித்தும் பாரிட் கம்போங் எவ்வித மாற்றமுமின்றி அதே ஆடு மாடுகளுடன் கவர்ச்சியாகக் காட்சிக் கொடுத்தது. அம்மா வாகனத்திலேயே எவ்வித சுட்டித்தனங்களும் பாட்டி வீட்டில் செய்யக் கூடாது என எச்சரித்தார்.

பாட்டி வீட்டை அடைந்ததும் வாகனத்தின் கதவடைக்காமல் ஓடிச் சென்று பாட்டியைக் கட்டித் தழுவிக் கொண்டோம். பாட்டி ஆசையாய் கண்ணத்தில் இட்ட முத்தத்தோடு பாசி பருப்பு பாயாசத்தின் மணம் மூக்கைத் துளைத்தது. அப்பாவும் அம்மாவும் களைப்புடன் வரவேற்பறையில் சென்று அமர்ந்தனர். பாட்டி அம்மாவின் கையிலிருந்தப் பாப்பாவை வாங்கிக் கொஞ்ச தொடங்கினார். நானும் தம்பியும் பாட்டியிடம் ஓராண்டு கதைகளை மூச்சு விடாது கையில் பாயாசத்தை ஏந்தியவாறு கூறிக் கொண்டிருந்தோம். பாட்டியும் சலிக்காமல் எங்கள் கதைகளைப் புன்னகையோடு கேட்டிருந்தார். அம்மா அதிகம் பேசாமல் ஓய்வு எடுக்கச் செல்லும் போதே நாங்கள் பாட்டியின் உத்தரவோடு வெளியில் விளையாடச் சென்றோம். சுற்றிலும் பலர் பல விளையாட்டுகளை விருப்பத்திற்கேற்ப விளையாடிக் கொண்டிருந்தனர். தலைநகரில் எளிதில் காண முடியாத அதிசயம் அது. நானும் தம்பியும் தூரத்தில் பெரிய வட்டத்திற்குள் பலர் நின்றுக் கொண்டிருந்ததைக் கண்டு அருகில் சென்றோம். அம்மா களைப்பில் உறங்குவதால் எப்படியும் எழுந்திட இரண்டு மணி நேரமாவது எடுக்கும் என மனக்கணக்குப் போட்டுக் கொண்டோம். எங்களையும் அந்த வட்டத்திற்குள் சேர்த்துக் கொண்டனர். உயரம் அடிப்படையில் தம்பியே இரண்டாவதாக நின்று கொண்டிருந்தான். எனக்கு ஆறாவது இடம். தம்பிக்கு முன்னே நின்றுக் கொண்டிருந்த சிறுவன் நொண்டியடித்துக் கொண்டு ஒரு கட்டத்தில் சென்று நின்றான். எனக்கும் தம்பிக்கும் அது புதிய விளையாட்டு என்பது அங்கு யாருக்கும் தெரியாது. பல விதிமுறைகளோடு விளையாட்டு சூடு பிடித்தது. நொண்டியடித்துச் சென்ற பையன் தம்பியைத் தொட்டதால் ஆட்டத்தை விட்டு விலக்கினார்கள். தம்பி ஓரமாக நின்று ஆட்டத்தைப் புரிந்தும் புரியாமலும் பார்த்துக் கொண்டிருந்தான். இப்போது என்னுடைய முறை வந்தது. நீண்ட நேரம் ஆட்டத்தைக் கூர்ந்துப் பார்த்ததை வைத்து விளையாட தயார் ஆகினேன். நொண்டியடிக்க எண்ணும் போது தான் அருகில் நின்ற தம்பியின் இருப்பு இல்லாததை உணர்ந்தேன்.

ஆட்டத்திலிருந்து வெளியேறி வந்த தூரம் வரை சென்று தம்பியைத் தேடினேன். தம்பியைக் காணவில்லை. அருகில் கோலி விளையாடிக் கொண்டிருந்தக் கூட்டத்திலும் தம்பி இல்லை. ஐஸ் கிரிம் வாங்க நின்றுக் கொண்டிருந்தக் கூட்டத்திலும் தம்பி தென்படவில்லை. சுற்றும் முற்றும் தம்பியைத் தேடி களைத்துப் போனேன். தம்பி இல்லாமல் வீட்டிற்குச் சென்றால் என்னைக் கொன்று விடுவார்கள் என்பது நன்றாகத் தெரியும். இருந்தும், என் சக்திக்கு இயன்றவற்றைத் தேடிவிட்டேன். எங்கும் அவனைக் காணும். உடனே பாட்டியின் வீட்டை நோக்கி மூச்சிரைக்க ஓடினேன். பாட்டி வெளியில் வெற்றிலை போட்ட எச்சை பூச்செடிகளுக்கு உரமாக்க நின்றிருந்தார். பதற்றத்துடன் தகவலைக் கூறினேன். பாட்டி ஒரு கணம் அதிர்ந்துப் போனவராய் என்ன செய்வதறியாது அப்பாவை அழைக்க உள்ளே ஓட இயலாமல் ஓடினார். அப்பா பதறியடித்து என்னை விசாரிக்க நான் நிகழ்ந்ததைக் கூறினேன். அப்பா வாகனத்தை எடுத்துக் கொண்டு தம்பியைத் தேட விரைந்தார். பாட்டி அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு விஷயத்தைத் தெரிவித்தார். உதவி என்றதுமே ஓடி வந்து செய்ய அங்கு பலர் தயாராக இருந்தனர்.

********************

அம்மாவின் புலம்பல்கள் அதிகமாயின. பாட்டி வீட்டிற்கு வந்த முதல் நாளே இப்படியொரு சம்பவம் நிகழும் என யாரும் அன்று எதிர்ப்பார்க்கவில்லை. அம்மா அப்போதே வாகனத்தில் எச்சரித்தது போல வீட்டிலேயே அமைதியாக இருந்திருந்தால் இத்துணைச் சிக்கல் வந்திருக்க வாய்ப்பில்லை. தம்பியும் காணமல் போயிருக்க மாட்டான். “எப்படியாவது பிள்ளைய காப்பாத்து ஆண்டவா!” எனப் பாட்டி தொடர்ந்து பல சாமிகளை வரிசையாகக் கும்பிட தொடங்கினார். அப்பா வீட்டிற்குத் தம்பி இல்லாமல் வந்த போது தான் அம்மாவின் அழுகை பாரிட் கம்பத்தையே உலுக்கியது. தம்பியைத் தேடி போன அனைவரும் தம்பியைக் காணவில்லை என ஒவ்வொரு முறையும் கூறுவது அம்மாவிற்கு அழுகையை அதிகரித்தது. அப்பா இறுதியில் காவல் துறையினரிடம் தெரிவிக்க முடிவுச் செய்தார். சூரியன் முழுமையாக மறைய தொடங்கியிருந்த நேரம் அது. பாரிட் கம்போங் விஷ பாம்புகள் அதிகம் வாழும் இடமென தாத்தா இறப்பதற்கு முன் ஒரு முறை எனக்குக் கூறியிருந்தது நினைவிற்கு வந்து தொல்லைச் செய்தது. நான் போலீஸ் ஸ்டேசன் போயிட்டு வரேன் மா…” அப்பா வீட்டு முன் வைத்திருந்த வாகனத்தின் கதவைத் திறக்கையில் வீட்டு முன் ex5 மோட்டர் சைக்கிள் ஒன்று வந்து நின்றது. மோட்டரில் ஒரு அண்ணனோடு தம்பியும் பயந்த முகத்துடன் அமர்ந்திருந்தான். நான் கும்பிட்ட சாமி என்ன கைவிடலஅமுதா இங்க பாரு உன் புள்ள.” பாட்டியின் கண்களில் ஆனந்த கண்ணீர் வழிந்தோடியது. அம்மா உள்ளிலிருந்து ஓடி வந்து தம்பியைக் கட்டித் தழுவி, அவன் உடலை பரிசோதித்தாள். தம்பி எந்த வித காயங்கள் இன்றி நன்றாகவே இருந்தான். தம்பியை அழைத்து வந்த அண்ணனிடம் கேட்ட போது ஏதோ ஒரு குளத்திற்கு அருகே மயங்கி கிடந்ததாகக் கூறினார். தம்பியிடம் கேட்டால் ஒன்றும் அறியாது பயந்து நின்றான். இதனை எல்லாம் கேட்டவுடன் அம்மா நாளைக்கே நம் வீட்டிற்குப் புறப்பட வேண்டும் என அப்பாவிடம் திண்ணமாகக் கூறிவிட்டார். இச்சம்பவத்திற்குப் பின் அப்பாவுக்கும் அம்மாவை எதிர்த்துப் பேச எண்ணம் வரவில்லை.

மறுநாள் காலையிலேயே பாட்டி வீட்டை விட்டு கிளம்பிவிட்டோம். பாட்டியை நானும் தம்பியும் கட்டி தழுவி அழுதப் பின் வாகனத்தில் சென்று அமர்ந்தோம். மகிழ்ச்சியாக இருக்க எண்ணி வந்த நாள்கள் ஒரே நாளில் முடியுமென சற்றும் எண்ணவில்லை. பாட்டி வீட்டை விட்டு சில தூரம் சென்றுக் கொண்டிருந்தோம். அன்று இளைஞர்கள் விளையாடிக் கொண்டிருந்த திடலில் அப்பா வாங்கிக் கொடுத்த மெசி ஸ்ட்டிக்கர் போட்ட பச்சை நிற பந்து காற்றில் யாருமின்றி சுழன்று கொண்டிருந்தது. அதனைப் பார்த்த அதிர்ச்சியில் தம்பியைக் கோபத்தோடு நோக்கினேன். அவன் கேலியாகச் சிரித்து என் மீது சாய்ந்து உறங்கத் தொடங்கினான்.

 

 

error: Copyrights: Content is protected !!