அமுதனின் ஆசை

அமுதனின் ஆசை

ஆக்கம் : M.S.F. சானுசியா

இலங்கை

அமுதன்  காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்தான்.யன்னலின் வெளியே பார்த்துக் கொண்டிருந்த அவனது உள்ளம் மகிழ்ச்சியால் நிரம்பி இருந்தது. ஏனென்றால்  கிராமத்தில் உள்ள தாத்தாவின் வீட்டிற்கு அவன் அம்மா அப்பாவுடன் சென்று கொண்டு இருக்கிறான். நகர்ப்புற வாழ்க்கைக்குப் பழக்கப்பட்ட அவனுக்கு கிராமத்தில் உள்ள எழில் கொஞ்சும் இயற்கை என்றாலே கொள்ளைப் பிரியம்.

மாசற்ற காற்று, சுகமான தென்றல், பல வண்ண மலர்களின் வாசனை, பச்சைக் கம்பளம் விரித்தாற் போன்ற வயல்வெளிகள், உயர்ந்ததும் குட்டையானதுமாக வளர்ந்திருக்கும் மரஞ்செடிகள், அங்கே சுதந்திரமாக சுற்றித் திரியும் பிராணிகள், மண் வாசனை, சலசல வென ஓடும் ஓடைகள் அத்துடன் அவனோடு விளையாட இருக்கும் நண்பர் கூட்டம் என அங்குள்ள பல அம்சங்கள் அவனுக்கு மட்டற்ற மகிழ்ச்சியைக் கொடுத்தன. ஆனால் வருடத்திற்கு ஒரு முறையே தாத்தாவின் வீட்டிற்குச் செல்வார்கள். நீண்ட பயணத்தின் பின்னர் அவர்கள் ஊரை அடைந்தார்கள். அங்கு அவன் கண்ட காட்சியை அவன் கண்களாலேயே நம்ப முடியவில்லை!

கடந்த வருடம் வரும்போது சலசல வென ஓடிய ஓடைகள் வற்றிப்போய் நூல் போல நீர் ஓடிக்கொண்டிருந்தது.  பச்சைப் பசேலென்ற வயல்வெளிகள் நீரின்றி வரண்டு போய் இருந்தன. அநேகமான மரங்களின் இலைகள் சறுகுகளாகிக் கீழே விழுந்திருந்தன. கண்களைக் கொள்ளை கொண்ட வண்ண வண்ண மலர்களைக் காணவே முடியவில்லை. அத்துடன் கிராமத்திற்கு வரும் போதெல்லாம் மாமாவின் பிள்ளைகளுடன் தாத்தா மானும் முயலும் காட்டுவதற்காக கூட்டிச்சென்ற அடர்ந்த காட்டின் அரைவாசிப் பகுதியை ஒரு பெரிய தொழிற்சாலை அடைத்துக் கொண்டிருப்பதை கண்டு வியந்து போனான். அமுதன் அப்பாவிடம் “அப்பா இது என்ன?” என்று தொழிற்சாலையை சுட்டிக்காட்டி கேட்டான்.” இது ஒரு இரசாயன தொழிற்சாலை. புதிதாகத்தான் கட்டப்பட்டிருக்கிறது” என்றார் அப்பா.” அப்போ இங்கே இருந்த மரங்கள் எல்லாம் எங்கே அப்பா?” என்று அவன் கேட்டான். “அவற்றையெல்லாம் வெட்டி அகற்றி, அதன் பின்னர்தான் தொழிற்சாலை கட்டியிருக்கிறார்கள்” என்று பதில் கூறினார் அப்பா. அமுதனின் மனம் சோகத்தினால் வாடியது. மிகுந்த கவலையுடன் “அப்படியென்றால் அங்கே இருந்த மிருகங்களுக்கு என்ன நடந்திருக்கும்? “என்று கேட்டான். “அவை வேறு இடம் தேடிப் போய் இருக்கும்”என்று அப்பா கூறினார். அமுதன் அமைதியாகிப் போனான். சுவர்க்கம் போல் இருந்த கிராமத்தின் தற்போதைய நிலையை அவனது  பிஞ்சு மனதால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ஒருவாராக தாத்தாவின் வீட்டை அடைந்தார்கள். அங்கே எல்லோரும் இவர்களுக்காகக் காத்திருந்தார்கள். இவர்களைக் கண்டவுடன் எல்லோரும் இன்முகத்துடன் வரவேற்றார்கள். அமுதனை கண்டவுடன் அவனின் நண்பர் கூட்டம் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். தாத்தா தடியை ஊன்றிய வண்ணம் அவன் அருகில் வந்து அவனைக் கட்டியணைத்து முத்தமிட்டார்.  பிறகு எல்லோரும் அளவளாவிக் கொண்டிருந்தனர். அமுதன் நண்பர்களுடன் விளையாடச் சென்றான். தாத்தாவின் வீட்டில் மட்டும் கொஞ்சம் பசுமை படர்ந்திருந்தது. தாத்தாவிற்கும் இயற்கை மீது கொள்ளைப் பிரியம். அதனால் தாத்தா வீட்டிற்கு முன்னால் இருந்த குழாய்க்கிணற்றின்  மூலம் வீட்டைச் சுற்றி இருந்த மரம் செடி கொடிகளுக்கு நீர் ஊற்றிப் பராமரித்து வந்தார்.

நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த அமுதன் மரத்தடி நிழலில் அமர்ந்திருந்த தாத்தாவின் அருகில் சென்று “தாத்தா! இந்த ஊர் ஏன் வறண்டு போயிருக்கிறது?” என்று கேட்டான்.தாத்தா ஒரு புன்னகையை உதிர்த்த வண்ணமே “மரங்கள் இருந்தால்தான் மழை வரும் என்று உனக்குத் தெரியுமா அமுதா? என்று கேட்டார். “ஆமாம் தாத்தா, எங்கள் பள்ளியில் சொல்லித் தந்திருக்கிறார்கள்” என்றான் அமுதன்.”ம்ம்.. நல்ல விடயம். நீ வரும் வழியில் பெரிய தொழிற்சாலை ஒன்றைக் கண்டிருப்பாயே! அது  காட்டில் இருந்த நிறைய மரங்களை வெட்டி அழித்த பின் கட்டப்பட்டது. நிறைய மரங்கள் வெட்டப்பட்டதால் எங்கள் ஊரிற்கு அதன் பின்  அதிகம் மழை பெய்யவில்லை. கிராமத்தில் இருந்த நீரை தொழிற்சாலைத் தேவைகளுக்காக  பயன்படுத்தத் தொடங்கினர்.  அத்துடன் தொழிற்சாலையின் இரசாயனக் கழிவுகளை நீரோடைகளில் கலந்துவிட்டனர்.  இதனால் நீர் கிடைக்காமல் மரஞ்செடி கொடிகள் எல்லாம் இறந்து விட்டன. எத்தனையோ பிராணிகளும் இறந்து விட்டன. அவ்வப்போது பெய்யும் மழையினால் தான் சில பயிர்களாவது எஞ்சி  இருக்கின்றது. அத்தோடு இங்குள்ள மக்களுக்கு தொழிற்சாலையின் கழிவினால் புதிய நோய்களும் வரத் தொடங்கியுள்ளது” என்று தாத்தா கவலையுடன் கூறினார்.

எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த அமுதன் “தாத்தா இதற்கு ஒரு தீர்வு இல்லையா?” என்று கேட்டான்.  “எங்களால் சில முயற்சிகளை செய்ய முடியும். அதாவது  மீள ஒரு காட்டை உருவாக்குவதற்காக இப்போதிலிருந்தே நாங்கள் மரக்கன்றுகளை நட்டு அதை பராமரித்து வரலாம். அத்துடன் தொழிற்சாலையை சூழல் மாசு படாத வண்ணம் செயற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார் தாத்தா. இதைக் கேட்ட அமுதன் “நாம் இப்போதிலிருந்தே மரக்கன்றுகளை நடுவோம் தாத்தா!” என்று உற்சாகமாகக் கூறினான். தாத்தாவும் சிரித்துக்கொண்டே அவனையும் மற்றைய பிள்ளைகளையும் தோட்டத்திற்குக் கூட்டிச்சென்று மரக்கன்றுகளை நட்டார்.  குழாய்க் கிணற்றில் இருந்து நீர் கொண்டுவரச் செய்து மரங்களுக்கு ஊற்றச் சொன்னார். பிள்ளைகளும் உற்சாகத்துடன் வேலைகளைச் செய்தனர். அமுதனின் மனம் அதன் பின்னர்தான் அமைதியானது. இரண்டு நாட்களின் பின்னர் தனது பெற்றோருடன் அமுதன்  கிராமத்திலிருந்து புறப்பட்டான். அடுத்த வருடம் ஒரு சிறிய காட்டை பார்க்கலாம் என்ற கற்பனையில் அவன் வீட்டிற்குச் சென்றான்.

 

 

 

error: Copyrights: Content is protected !!